ஈசூன் வீவக வீட்டில் மூண்ட தீயில் 17 வயது இளையர் உயிரிழந்தார்.
சனிக்கிழமை அன்று புளோக் 783 ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள 12வது மாடி வீட்டில் தீ மூண்டது. வீடு முழுவதும் நிரம்பியிருந்த புகையில் இளையர் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்ததாகவும் அவரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றதாகவும் காவல் துறைப் பேச்சாளர் ஒருவர் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
ஆனால் கடுமையான தீக் காயங்களால் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
தீயணைப்பாளர்கள் அவரை மீட்டு தரைத்தளத்திற்கு கொண்டு வந்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் இளையரின் இதயத் துடிப்பை மீட்கும் சிகிச்சைகளை மேற்கொண்டனர். பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சனிக்கிழமை இரவு 8.55 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்தாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அங்கு அவர்கள் வந்தபோது வீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்பாளர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
வீட்டின் படுக்கை அறையில் தீ மூண்டிருந்தது. தீயணைப் பாளர்கள் நீரைப் பாய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அந்த சமயத்தில் அக்கம்பக்கத்தில் குடி யிருந்த சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீச்சம்பவத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.
2022ஆம் ஆண்டில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் என்று கடந்த பிப்ர வரியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
இவர்களில் மூவர், பிடோக் நார்த்தில் மே மாதம் நிகழ்ந்த தீ விபத்தில் மாண்டனர். மூன்று வயது மகளும் தந்தையும் இவர்களில் அடங்குவர்.

