பறவைகள் மகிழ்வனத்தை ஆர்வமாக சுற்றிப் பார்த்த ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியது.
அந்தக் குடும்பத்தின் சிறுமியை ஒரு காக்கட்டுப் பறவை தாக்கி காயப்படுத்தியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பறவை மகிழ்வனம் திறக்கப்பட்ட 15 நிமிடத்தில் தனது மகள் ஒரு பறவையைப் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென பறந்து வந்த ஒரு காக்கட்டுப் பறவை அவரது தோளில் அமர்ந்ததாக இல்லத்தரசியான செரின் சென் தெரிவித்தார்.
பின்னர் தனது மகளின் காதை காக்கட்டுப் பறவை தொடர்ந்து கொத்தத் தொடங்கியதாக அவர் கூறினார்.
"உடனடியாக நாங்கள் அவளைக் காப்பாற்ற ஓடி வந்தோம். அவளிடம் நகர வேண்டாம் என்று நான் கூறினேன். பறவை வேகமாகக் காதைக் கொத்திக் கொண்டிருந்தது. நான் என் நடுவிரலைப் பயன்படுத்தி பறவையைத் தடுக்க முயற்சி செய்தேன். என்னுடைய கணவர் பறவையைத் தள்ளிவிட்டார்," என்று 41 வயது மாது கூறினார்.
சிறுமியின் காதில் அதிக ரத்தம் வழிந்ததால் அருகிலிருந்த துப்புரவாளரிடம் குடும்பத்தினர் உதவி கேட்டனர். தொடக்கநிலை 1ஆம் வகுப்பில் படிக்கும் மாணவி யின் காது சிவந்து ரத்தம் வழி வதைப் படங்கள் காட்டின.
சுமார் 15 முதல் இருபது நிமிடங்களில் அங்கு வந்த பறவைகள் மகிழ்வனத்தின் ஊழியர் ஒருவர் மாணவிக்கு முதலுதவி களைச் செய்தார்.
கூ டெக் புவாட் மருத்துவ மனைக்குச் சென்ற குடும்பத்தினர் சிறுமிக்கு முறைப்படி சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
சம்பவம் குறித்துப் பேசிய மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் பேச்சாளர் ஒருவர், குறிப்பிட்ட காக்கட்டுப் பறவையை காட்சியகத்தின் பின்புறத்தில் உள்ள வீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அது மனிதர்களை கொத்தாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
குடும்பத்துடன் குழுமம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
மண்டாய் பறவைகள் மகிழ் வனத்தில் உள்ள காட்சியகங்கள் இயற்கையான சூழலில் பறவைகள் சுதந்திரமாக பறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இது, பறவைகளுக்கும் நல்லது என்று பேச்சாளர் மேலும் கூறினார்.
"பறவைகளும் மனிதர்கள் மாதிரிதான்.
"பாதுகாப்பான இடத்தில் அவை இருக்கும்போது தொந்தரவு செய்யக்கூடாது. பறவைகளிடமிருந்து தள்ளியிருப்பது நல்லது," என்று அவர் சொன்னார்.

