சிங்கப்பூர் வெறும் கான்கிரீட்டு களால் ஆன காடு அல்ல என்பதை தனது கணவர் தமக்கு உணர்த்தியதாக எவரெஸ்ட் மலை உச்சியை வெற்றிகரமாகத் தொட்டு மே 19ஆம் தேதி காணாமல்போன ஸ்ரீநிவாஸ் சைனிஸ் தத்தாதிரயாவின் மனைவி சுஷ்மா சோமா தெரிவித்துள்ளார்.
காணாமல்போன கணவருக்குப் புகழாரம் சூட்டும் வகையில் நேற்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சிங்கப்பூரில் கணவர் சென்ற இடங்களையெல்லாம் சென்றுவந்ததாக அவர் தெரிவித்தார்.
"ஒவ்வொரு வாரயிறுதி யிலும் ஸ்ரீ தனது முதுகில் 15-20 கிலோ எடையுள்ள பையைத் தூக்கிக்கொண்டு காலை 7.00 மணிக்கு நடக்கக் கிளம்பி விடுவார். மாலை நான்கு மணிக்கே அவர் வீடு திரும்புவார்," என்று கூறிய சுஷ்மா, மெக்ரிட்சி நீர்த்தேக்கம், ரயில் பசுமைப் பாதை, புக்கிட் தீமா மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு கணவர் செல்வார் என்றார்.
"அவர் மூலம் சிங்கப்பூர் கான்கிரீட் காடுகளுக்கும் மேலானது என்பதைப் புரிந்துகொண்டேன்."
"சிங்கப்பூரில் அழகிய நீரோட்டங்களும் மழைக்காடுகளும் மறைந்துள்ளதை சுட்டிக்காட்டி என் கண்களை அவர் திறந்தார்," என்று 36 வயது இசைக் கலைஞரான சுஷ்மா தெரிவித்தார்."
ஜோன்ஸ் லாங் லசால் என்ற சொத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த 39 வயது ஸ்ரீநிவாஸ் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி எவரெஸ்ட் மலை ஏறுவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
மே 19ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட அவர் கீழே வரவில்லை.
அன்று அங்கிருந்து செயற்கைகோள் தொலைபேசி வழியாக தனது மனைவியுடன் பேசிய அவர், மிக உயரமான இடத்தில் ஏற்படும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவரது குழுவில் இருந்த ஷெர்பா வழிகாட்டி யும் மற்றொரு நபரும் திரும்பிவிட்டனர். ஆனால் இந்நாள் வரை ஸ்ரீநிவாஸ் திரும்பவில்லை.