இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான உள்ளூர் வர்த்தகச் சூழல் மீதான நம்பிக்கை கடந்த ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மேலும் நலிவடைந்துள்ளதாக சிங்கப்பூர் வர்த்தகக் கடன் இலாகா தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறை, ஒட்டுமொத்த விற்பனைத் துறை ஆகியவை மேலும் வீழ்ச்சிகாணும் என்று கூறப்படுவதற்கு இடையே இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் வர்த்தகக் கடன் இலாகா நேற்று வெளியிட்ட அறிக்கையில் மூன்றாம் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கைக் குறியீடு 3.98 விழுக்காட்டுப் புள்ளியாகக் குறைந்துள்ளது. முந்தைய காலாண்டில் அது 4.6 ஆகவும் சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அது 5.1 விழுக்காட்டுப் புள்ளியாகவும் இருந்தது.
"கடந்த 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து ஆறு காலாண்டுகளாக வர்த்தகச் சமூகத்தினரின் ஒட்டுமொத்த நம்பிக்கை சரிவில் உள்ளது," என்றார் சிங்கப்பூர் வர்த்தகக் கடன் இலாகாவின் தலைமை நிர்வாகி ஆட்ரி சியா.
அனைத்துலக நிதிச் சூழலில் இழப்புகள் ஏற்படக்கூடிய அபாயங்கள், தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள், சீனாவின் மந்தமடைந்துவரும் தேவைகள் ஆகியவற்றின் பின்னணியில் ஆண்டின் இரண்டாவது பாதியில் அடியெடுத்து வைப்பதிலும் அதே நம்பிக்கைச் சரிவு தொடரும் என எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
பொதுவாக விற்பனை அளவு, நிகர லாபம், விற்பனை விலை, புதிய கொள்முதல் ஒப்பந்தங்கள், சரக்குக் கையிருப்புப் பட்டியல், வேலைவாய்ப்பு ஆகிய ஆறு அம்சங்களும் வர்த்தக நம்பிக்கைக் குறியீட்டை நிர்ணயிப்பவை.
இவற்றில் ஐந்து அம்சங்கள், இரண்டாம் காலாண்டில் இருந்த நிலையிலேயே தொடர்கின்றன. ஆறில் மூன்று அம்சங்கள் காலாண்டு அடிப்படையில் நலிவு கண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.
ஆண்டு அடிப்படையில் விற்பனை அளவு, நிகர லாபம், விற்பனை விலை ஆகியவை உயர்ந்துள்ளன. இருப்பினும் புதிய கொள்முதல் ஒப்பந்தங்களும் வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன. கட்டுமானம், நிதித் துறைகளில் வர்த்தகச் சூழல் நம்பிக்கை வலுவாக இருந்தன. சேவை, போக்குவரத்துத் துறைகளிலும் நம்பிக்கைக் குறியீடு ஓரளவு வலுவாக உள்ளன.

