நூலகத்திற்கு அருகில் வசிக்காதவர்களும் நூலகத்திற்குச் செல்ல நேரம் இல்லாதவர்களும் இனி இணையத்தில் புத்தகங்களை இரவல் பெற்று, வீட்டிற்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யலாம். 'போரோ-அண்ட்-டிலிவர்' எனும் தேசிய நூலக வாரியத்தின் புதிய ஓராண்டுகால முன்னோடித் திட்டம் நேற்று தொடங்கியது.
அந்தத் திட்டத்தின்கீழ், புத்தகவாசிகள் தேசிய நூலக வாரியத்தின் மின் பட்டியலில் 4 பொருள்கள் வரை தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு முறையும் $8 (பொருள், சேவை வரிக்கு முன்னர்) கட்டணம் செலுத்தினால், அவை வீட்டிற்கு அனுப்பப்படும்.
புத்தகங்கள், சஞ்சிகைகள், ஒலி-ஒளிச் சாதனங்கள் அந்தப் பொருள்களில் அடங்கும் என்று வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புத்தகவாசிகள் எந்தவொரு பொது நூலகத்திற்கும் நேரடியாகச் சென்று இரவல் பெற்ற பொருள்களைத் திரும்பக் கொடுக்கலாம்.
வாசிப்பும் கற்றலும் பொதுமக்களுக்கு மேலும் எளிதாகக் கிடைக்கவேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம் என்று வாரியத்தின் தலைமை நிர்வாகி இங் சர் போங் கூறினார்.
மே மாதம் 2024ஆம் ஆண்டுவரை தொடரும் இந்த முன்னோடித் திட்டம், வாரியத்தின் உறுப்பினராக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
நூலகப் பொருள்கள், செந்தோசா உட்பட தீவு முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் விநியோகச் சேவை வழங்கப்படும்.
இதற்கிடையே, கடந்த மே மாதம் வாரியம் 'த லிட்டில் புக் போக்ஸ்' எனும் குழந்தைகளுக்கான புத்தகச் சந்தா சேவையை விரிவுபடுத்தியது.
அதில் தாய்மொழிப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டன. சிறு வயதிலிருந்தே குழந்தைகள் இடையே தாய்மொழிக்கான ஆர்வத்தை வளர்க்க வாரியம் விரும்புகிறது.
இதுவரை தாய்மொழிக்கான தெரிவுக்கு 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக வாரியம் கூறியது.

