மாண்டுகிடக்கக் காணப்பட்ட
தேசிய சேவையாளர்
சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த தேசிய சேவையாளர் ஒருவர் நேற்று காலை சாங்கி கடற்படைத் தளத்தில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார். அவர் காலை மணி 8.50க்குக் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. ஆடவரின் மரணத்துக்கும் பயிற்சிக்கும் தொடர்பில்லை என அமைச்சு தெரிவித்தது. இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அந்தச் சம்பவத்தின் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன.
'த பேட்டல்பாக்ஸ்' செல்ல
அக்டோபர் 3 முதல் அனுமதி இலவசம்
ஃபோர்ட் கேனிங் பார்க்கில் அமைந்துள்ள
'த பேட்டல்பாக்ஸ்' என்ற நிலத்தடி தளபத்திய நிலையத்திற்கு அக்டோபர் 3ஆம் தேதி முதல் மக்கள் இலவசமாகச் செல்லலாம். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களிடம் பிரிட்டிஷார் சரணடைந்த இடம் இந்த 'த பேட்டல்பாக்ஸ்' ஆகும். லாப நோக்கற்ற கலைகள், கலாசார அமைப்பான குளோபல் கலாசார கூட்டணியின் புதிய நிர்வாகத்தில் 'த பேட்டல்பாக்ஸ்' செயல்படவுள்ளது. மெய்நிகர் தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்த விரும்புவோர் கட்டணம் செலுத்துவர் என்றும் அது தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. (ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்)

