ஜூரோங் வட்டாரத்தில் வாடகைக்கு வீடு தருவதாக மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 34 வயது ஆடவர் கைதுசெய்யப் பட்டுள்ளார்.
புளோக் 166ஏ யுங் குவாங் ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டை வாடகைக்கு விடுவதாக ஆலன் எர் சுன் யோங் பலரை ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.
அதன் தொடர்பில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் முதல் கிட்டத்தட்ட 28 புகார்கள் பெறப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
வெவ்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக முழு வீட்டையோ தனி அறைகளை மட்டுமோ வாடகைக்குப் பெறுவதில் ஆர்வம் காட்டுவோரைத் தொடர்புகொண்டு ஆடவர் முன்பணம் பெற்றுக்கொள்வார்.
சென்ற மாதம் $30,000க்கு மேற்பட்ட தொகையை அவர் அவ்வாறு பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
முன்பணம் பெற்றுக்கொண்ட பிறகு ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி வாடகை ஒப்பந்தத்தை மீறுவதோடு பணத்தையும் அவர் திருப்பித்தரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
ஆடவரிடம் $2,300 முதல் $10,200 வரை பலரும் பல்வேறு தொகைகளைத் தந்ததாகக் கூறப்படுகிறது.
ஆடவரை அடையாளம் கண்ட ஜூரோங் பிரிவு காவல்துறை அதிகாரிகள் ஏப்ரல் 5ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் விசா விண்ணப்பம் தொடர்பான மோசடியிலும் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
ஏமாற்று தொடர்பில் எர் மீது நாளை குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
வாடகை வீடு தொடர்பான மோசடிகளில் சிக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.
வாடகைக்கு எடுக்க விரும்பும் வீட்டை நேரில் சென்று பார்க்கும்படியும் அதன் தொடர்பில் தங்களுடன் பேச்சு நடத்துபவரின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும்படியும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

