செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4c21d56c-36de-4abc-b5fc-f0a701735daa
-

கவலை, மனச்சோர்வு ஆகியவற்றால் ஆண்டுக்கு $16 பில்லியன் இழப்பு

கவலை, மனச்சோர்வு ஆகியவற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்படுவோரால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $16 பில்லியன் செலவாகக்கூடும் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது ஏறத்தாழ 2.9 விழுக்காடு. உற்பத்தித் திறன் குறைவு, சுகாதாரப் பராமரிப்பு வளங்களுக்கான தேவை போன்றவற்றால் அவ்வாறு செலவிட நேரிடும்.

கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு கவலை, மனச்சோர்வு தொடர்பில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு அது.

டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியும் மனநலக் கழகமும் இணைந்து சிங்கப்பூரர்களிடம் அந்த ஆய்வை நடத்தின. சென்ற ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 21 வயதைக் கடந்த 5,725 சிங்கப்பூரர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 350 பேரிடம் கவலை, மனச்சோர்வு ஆகியவற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆண்டுக்குச் சராசரியாக 1,050 வெள்ளியை அத்தகையோர் சுகாதாரப் பராமரிப்புக்காகச் செலவிடுவதாகக் கூறப்பட்டது. சென்ற ஆண்டு அவர்களில் 13 விழுக்காட்டினர் அவசர சிகிச்சைப் பிரிவை நாடினர். ஒன்பது விழுக்காட்டினர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர். ஓர் ஆண்டில் சராசரியாக 17.7 நாள் பணிக்குச் செல்ல முடியவில்லை. வேலைக்குச் சென்றாலும் 40 விழுக்காட்டினர் சரிவர வேலை செய்ய முடியவில்லை என்று கூறினர்.

நிறுவனக் காப்பீட்டுத் திட்டத்தில் மனநல பாதிப்புகளுக்கும் காப்புறுதி

சிங்கப்பூரில் கூடுதலான நிறுவனங்கள் அவற்றின் நிறுவனக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மனநல பாதிப்புகளுக்கும் காப்புறுதி வழங்கத் தொடங்கியுள்ளன.

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன் அத்தகைய போக்கு அதிகரித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய காப்பீட்டு நிறுவனங்கள் கூறின.

தங்களின் முழுமையான உடல்நலத்திற்கு நிறுவனங்கள் முன்னுரிமை தரவேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. நீண்டகால அடிப்படையில் திறனாளர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் அது உதவும்.

உற்பத்தி சிறப்பாக இருக்கவும் வேலையில் முழுமையாக உணர்வதற்கும் ஊழியர்களின் உடல்நலம் முக்கியப் பங்கு வகிப்பதாக நிறுவனங்கள் கருதுவதாக காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்டன.

வேலையிடத்தில் ஊழியர்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும் நலவாழ்வுத் திட்டங்கள், பயிலரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதில் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டது.