மாணவர்கள் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற ஊக்குவிக்கும் நோக்கில் கல்வி அமைச்சு எடுசேவ் விருதுகளை வழங்கி வருகிறது.
அவ்விருதுகள் இனி பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் பங்களித்துள்ள மாணவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட இருக்கின்றன.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று அதனைத் தெரிவித்தார்.
முதலில் பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அவ்விருதுகள் காலப்போக்கில் துணைப்பாட நடவடிக்கைகள் தொடர்பிலும் வழங்கப்பட்டன என்பதை அமைச்சர் சுட்டினார்.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் 35ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் திறன்தகுதி குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் சான் அவ்வாறு குறிப்பிட்டார்.
ஒருவரின் சாதனைகள் மட்டுமே வெற்றி என்று கருதாமல் பங்களிப்பிற்காகவும் ஒருவரை வெற்றியாளராக கௌரவிக்கலாம் என்பதை வலியுறுத்தும் சமுதாயமாகத் தாம் சிங்கப்பூரைக் காண விரும்புவதாக அவர் கூறினார்.
"ஏழை, பணக்காரர், கல்விமான், படிக்காதவர் என்ற பேதங்களின்றி யார் வேண்டுமானாலும் சமுதாயத்திற்குப் பங்களிக்க முடியும்.
"அந்தப் பங்களிப்பு அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு அமைவது அவசியம்," என்று திரு சான் வலியுறுத்தினார்.
வெற்றி, திறன்தகுதி ஆகியவற்றின் பொருளை மறுவரையறை செய்ய வேண்டியதன் தேவை குறித்து அவர் கூறினார்.
சிங்கப்பூர் எதிர்கொள்ளும் புதிய சவால்கள், சமூகத்தில் அதிகரிக்கும் வேற்றுமைகள் ஆகியவற்றுக்கிடையே வெற்றி, திறன்தகுதி ஆகியவற்றை மறுவரையறுக்க வேண்டியது அவசியமாகிறது என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.
சிங்கப்பூரில் வெற்றி என்பது ஒரு குழு முயற்சியாக அமைய வேண்டும். அது ஒரு குழு விளையாட்டு. அவரவர் தனக்கான பந்தயத்தில் தனிப்பட்ட முறையில் ஓடுவது அன்று," என்றார் அவர்.
சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர், தங்கள் சொந்த சாதனைகளுக்கும் அப்பால், இயன்றவரையில் ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பே திறன் தகுதியை நிர்ணயிக்கும் என்று அமைச்சர் சொன்னார்.
திறன்தகுதி என்ற அம்சம் சிங்கப்பூருக்கு கடந்த 50 ஆண்டுகளாக வெற்றி ஈட்டித் தந்ததாகத் திரு சான் கூறினார்.

