இன அடிப்படையிலான ஒதுக்கீட்டின்கீழ் வீவக வீடுகளை விற்பனை செய்ய உதவி கோரியோர் குறித்து அமைச்சர் சண்முகம்
சென்ற ஆண்டு இன அடிப்படையிலான ஒதுக்கீட்டின்கீழ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டை விற்பனை செய்வது தொடர்பில் உதவி கோரி விண்ணப்பித்த மூன்றில் ஒரு பங்கினருக்கு வெற்றி கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
வீட்டை விற்பதற்குக் கூடுதல் கால அவகாசம், கட்டணச் சலுகை உள்ளிட்டவை தொடர்பில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு விற்கப்பட்ட வீடுகள் சென்ற ஆண்டு விற்பனையான மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கையில் 1.5 விழுக்காடு என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் 35ஆம் ஆண்டு நிறைவுக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
இன ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டுக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிடுவதற்குப் பதிலாக சிறிய எண்ணிக்கையிலானோரே பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் பிரச்சினைகளை நீக்குப்போக்குடன் கையாளும் அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றுகிறது.
1989ஆம் ஆண்டு இன அடிப்படையிலான வீடு ஒதுக்கீட்டுமுறையை அரசாங்கம் அறிமுகம் செய்தது.
ஒவ்வொரு வீவக அடுக்குமாடிக் குடியிருப்பிலும் அதற்கும் அப்பால் அக்கம்பக்கத்திலும் இன ரீதியிலான வளாகங்கள் தோன்றாமல் தடுக்க அக்கொள்கை உதவுகிறது.
இந்நிலையில், சென்ற ஆண்டு வீவக புளோக்குகளில் மூன்றில் ஒரு பங்கும் வீவக அக்கம்பக்கப் பேட்டைகளில் பத்தில் ஒரு பங்கிலும் இன அடிப்படையிலான ஒதுக்கீட்டு வரம்புகள் எட்டப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறையில் இல்லாவிட்டால் இன ரீதியிலான வளாகங்கள் உருவாகியிருக்கும் என்பதை அவர் சுட்டினார்.
"சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் இந்த இன அடிப்படையில் வீடுகளை ஒதுக்கும் கொள்கையும் ஒன்று.
"இனவாதம் என்பது மனித இயல்பு என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
"மற்றெந்த சமூகத்தையும்போலவே சிங்கப்பூரிலும் இனவாதம் நிலவுகிறது.
"ஆனால் அது இங்கு வேரூன்றாமல் இருப்பதை உறுதிசெய்ய நாம் கடினமாக முயலவேண்டும்," என்று அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.
சீனர், மலாய்க்காரர், இந்தியர், மற்ற இனத்தவர் என்ற பாகுபாடுகளைக் களைவது சிங்கப்பூரில் எப்போதாவது சாத்தியமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
"இத்தகைய பாகுபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் இப்பாகுபாடுகள் அரசாங்கம் சில பிரிவினருக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டவை. இவற்றுக்கும் வேலைகள், இதர வாய்ப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை," என்று அமைச்சர் கூறினார்.
திரு தர்மன் சண்முகரத்னம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கேட்கப்பட்டது.
"அவர் முதிர்ச்சியடைந்த மனிதர். இது அவரது முடிவு," என்று பதிலளித்தார் அமைச்சர் சண்முகம்.
மக்கள் செயல் கட்சி வேறுபட்ட கண்ணோட்டங்களை ஒப்புக்கொள்வதில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், "தற்போதைய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்தது அக்கட்சி அன்று. மக்களே அதைத் தேர்ந்தெடுத்தனர்," என்று கூறினார்.