பிரதமர் லீ சியன் லூங் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையை ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பேரணி உரை நடைபெறும்.
ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் குற்றவியல் சட்டப் பிரிவு 377A நீக்கப்படும் என்று சென்ற ஆண்டின் தேசிய தினப் பேரணியில் திரு லீ அறிவித்தார். அதேவேளையில் சிங்கப்பூர் திருமணத்தின் வரையறைக்கு மதிப்பளிக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
சிங்கப்பூர் அப்போது கொவிட்-19 கிருமிப்பரவலை எதிர்கொண்டிருந்த நிலையில், உட்புறங்களில் முகக்கவசம் அணிவதற்கான தேவை தளர்த்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
வட்டாரத்தின் நிலைத்தன்மைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கும் பொருளியல் சவால்களுக்கும் மனரீதியாகத் தயாராகும்படி சிங்கப்பூரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
பாய லேபார் ஆகாயத் தளம் இடம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாய லேபாரில் 150,000 புதிய வீடுகளைக் கட்டுவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் திரு லீ அந்தப் பேரணியில் விவரமாக எடுத்துக்கூறியிருந்தார்.
துவாஸ் துறைமுகம், சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் ஆகியவற்றை அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்தும் அவர் விவரித்தார்.

