பசுமைத் தொழில்களை நிரப்புவதற்கான தேவை, சிங்கப்பூரில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மீட்சிகாண உதவியிருக்கிறது.
நிச்சயமற்ற பொருளியல் சூழலுக்கு இடையிலும் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்கு முன்பாக, சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆட்சேர்ப்பில் கவனம் செலுத்த அது கைகொடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.
மற்ற துறைகளிலும் ஆட்சேர்ப்பு வலுவடைந்திருப்பதால் மூன்றாம் காலாண்டுக்கான நிகர வேலைவாய்ப்பு விகிதம் மேம்பட்டு 34 விழுக்காடாகப் பதிவானது.
சிங்கப்பூரில் ஒன்பது துறைகளைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்ட அண்மைய கருத்தாய்வில் அது தெரியவந்தது.
ஆட்சேர்ப்பு நிறுவனமான 'மேன்பவர் குரூப்' அக்கருத்தாய்வின் முடிவுகளை நேற்று வெளியிட்டது.
கரிமச் சேவை, பசுமை நிதி நடுவமாக சிங்கப்பூர்் தன்னை நிலைநாட்ட முயலும் வேளையில், நிறுவனங்கள் பசுமைத் துறை சார்ந்த பதவிகளில் ஊழியர் எண்ணிக்கையை அதிகரிப்பதாக 'மேன்பவர் குரூப் சிங்கப்பூர்' நிறுவனத்தின் சிங்கப்பூர்க் கிளை மேலாளர் லிண்டா தியோ கூறினார்.
2050க்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை அடைய சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
பருவநிலை சார்ந்த இலக்குகளைக் கவனத்தில் கொண்டு, நிறுவனங்கள் அவற்றின் வர்த்தக உத்திகளை வகுத்து வருவதால், பசுமைத் தொழில்களுக்கான ஊழியர் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று திருவாட்டி தியோ குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான வேலைவாய்ப்புக் கருத்தாய்வில் 510 நிறுவனங்கள் கலந்துகொண்டன.
அதில் 48 விழுக்காட்டு நிறுவனங்கள் இவ்வாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளன.
இருப்பினும் 14 விழுக்காட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளன.
மேலும் 36 விழுக்காட்டு நிறுவனங்கள் தற்போதுள்ள ஊழியர் எண்ணிக்கையைத் தொடரத் திட்டமிடுவதாகக் கூறின.
எஞ்சியுள்ள இரண்டு விழுக்காட்டு நிறுவனங்கள் அதன் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை.
கருத்தாய்வில் கலந்துகொண்ட ஒன்பது துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களிலும் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை 22 முதல் 57 விழுக்காடாக இருக்குமெனக் கூறப்பட்டுள்ளது.
எரிசக்தி, பொதுப் பயனீடு ஆகிய துறைகளில் ஆட்சேர்ப்பு வலுவாக இருக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது.