செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
52f64e6c-de88-469a-ace5-a64d7ba60be2
-

சினிலேஷரில் இருந்து வெளியேறும் கேத்தே சினிப்லெக்ஸ் திரையரங்கு

கிரேஞ் ரோட்டில் உள்ள சினிலேஷர் கட்டடத்திலிருந்து கேத்தே சினிப்லெக்ஸ் திரையரங்கு வெளியேறுகிறது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய திரையரங்கு நிறுவனமான கோல்டன் வில்லேஜும், சிறிய நிறுவனமான தி புரொஜெக்டரும் முதன்முறையாக இணைந்து புதிய திரையரங்கை அங்கு நடத்தவிருக்கின்றன.

சினிலேஷரில் 'கோல்டன் வில்லேஜ் எக்ஸ் தி புரொஜெக்டர்' அல்லது 'ஜிவி எக்ஸ் டிபி' என்றழைக்கப்படும் அத்திரையரங்கு, இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் படங்களைத் திரையிடவிருக்கிறது.

சினிலேஷரின் உரிமையாளர் கேத்தே அமைப்பாகும்.

ஹேண்டி ரோட்டில் உள்ள 'தி கேத்தே' கட்டடமும் அதன்கீழ் இயங்குகிறது. கேத்தே சினிப்லெக்ஸ் சினிலேஷரில் ஜூன் 30ஆம் தேதி வரை படங்களைத் திரையிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

கோல்டன் வில்லேஜ் திரையிடும் படங்களோடு தி புரொஜெக்டரின் ரசிகர்கள் விரும்பும் அனைத்துலகத் திரைப்பட விழாக்கள், நேரடி நிகழ்ச்சிகள் போன்றவையும் சினிலேஷரில் திரையிடப்படும் என்று இரண்டு நிறுவனங்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஆக அதிகம் விற்பனையாகும் பிஒய்டி மின்-கார்கள்

சீனாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான 'பிஒய்டி' தயாரிக்கும் மின்-கார்கள் சிங்கப்பூரில் இவ்வாண்டு ஆக அதிகம் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 'டெஸ்லா' நிறுவனம் தயாரிக்கும் மின்-கார்களின் எண்ணிக்கையை விஞ்சி, சிங்கப்பூரில் ஆக அதிக எண்ணிக்கையில் அவை விற்பனை ஆயின.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில், 303 'பிஒய்டி' மின்-கார்கள் இங்கு பதிவுசெய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.

'டெஸ்லா' நிறுவனத்தின் 283 மின்-கார்களும் 'பிஎம்டபிள்யூ' நிறுவனம் தயாரித்த 249 மின்-கார்களும் விற்பனை ஆனதாகத் தெரிகிறது.

'பிஒய்டி' விற்பனை செய்த மின்-கார்களில் ஏறக்குறைய 20 விழுக்காட்டு கார்களை தனியார் வாடகை வாகன நிறுவனங்கள் வாங்கியுள்ளன.

சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்-கார்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் புதிதாக 'ஒப்பெல்', 'வோல்வோ' என இரண்டு நிறுவனத் தயாரிப்புகளும் சேர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.