விடுமுறையைக் கழிப்பதற்காகத் தைவானுக்குத் தனியே சென்ற
22 வயது சிங்கப்பூரர் அமிலியா மூ வென் சியின் சடலம் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் சிங்கப்பூர் திரும்பத் திட்டமிட்டிருந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் பெற்றோரின் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அளிக்கவில்லை. மறுநாள் அவரது உடல் ஹுவாலியன் நீர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் திருவாட்டி மூ நீரில் மூழ்கியது தெரியவந்ததாக 'ஏஷியா ஒன்' செய்தி இணையத்தளம் கூறியது.
குற்றச்செயல் ஏதும் நடந்திருக்கக்கூடிய சாத்தியத்தை தைவானியக் காவல்துறையினர் நிராகரித்தனர்.
சென்ற மாதம் 7ஆம் தேதி காலை, மாது ஒருவரின் உடல் ஹுவாலியன் நீர்ப்பகுதியில் மிதந்துகொண்டிருந்ததாக தைவானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. மாதின் உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதும் தென்படவில்லை.
மாண்ட மாதின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகத்துடன் இணைந்து அவர்களுக்கு உதவிவருவதாகக் கூறியது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டிருந்த மூ, தேர்வுகள் முடிந்ததைக் கொண்டாடக் கடந்த ஏப்ரல் மாதம் தைவான் சென்றிருந்தார்.
மே 8ஆம் தேதி சிங்கப்பூர் திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மே மாதம் 6ஆம் தேதி அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. திருவாட்டி மூ தைவானுக்குச் சென்றது இது முதல் முறை அன்று என்றும் தைவானில் தங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை மூ சந்தித்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தேர்வை எழுத அவர் திட்டமிட்டிருந்ததாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியில் சேரவிருந்ததாகத் தெரிகிறது.

