முகக்கவசம் அணிந்திராத மாது ஒருவரை இனம் தொடர்பாக தூற்றியதுடன் அவரது மார்பில் எட்டி உதைத்ததன் தொடர்பில் 32 வயது வோங் ஸிங் ஃபோங் மீதான தாக்குதல், பிறர் மனதைப் புண்படுத்துதல் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின.
சுவா சூ காங் வட்டாரத்திலுள்ள நார்த்வேல் கூட்டுரிமை வீடுகளுக்கு அருகில் திருவாட்டி ஹிந்தோச்சா நிட்டா விஷ்ணுபாய் மீது 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் வோங் தாக்குதல் நடத்தியதாக அறியப்படுகிறது.
சுவா சூ காங் விளையாட்டரங்கை நோக்கித் தாம் வேலை பார்க்கும் விரைவு உணவகத்திற்கு திருவாட்டி நிட்டா வேகநடைபயிற்சியை மேற்கொண்டபோது முகக்கவசத்தை இறக்கி வைத்திருந்ததாக நேற்று நீதிமன்றத்தில் அவர் கூறினார்.
அப்போது யாரோ கத்தும் சத்தம் கேட்டுத் திரும்பிய திருவாட்டி நிட்டா, அங்கு வோங்கும் அவரின் காதலி திருவாட்டி சுவா யுன் ஹானும் இருப்பதைக் கண்டார். முகக்கவசத்தை மூக்கை மறைக்கும் வகையில் அணியுமாறு இருவரும் திருவாட்டி நிட்டாவிடம் கூறியுள்ளனர். தாம் உடற்பயிற்சி செய்வதாக திருவாட்டி நிட்டா விளக்கம் அளித்தும் வோங் அவரைத் தகாத சொற்களால் திட்டியிருந்தார்.
சண்டை மூள்வதைத் தவிர்க்க திருவாட்டி நிட்டா, 'கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்' என்று கூறிவிட்டுச் செல்ல முயன்றபோது வோங் அவரது மார்புப் பகுதியில் உதைத்தார். அதன் பிறகு வோங்கும் அவரின் காதலியும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கீழே விழுந்த திருவாட்டி நிட்டாவுக்குக் கை, கால்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
அவருக்கு உதவியவர் பின்னர் சாட்சியம் அளித்தபோது வோங் திருவாட்டி நிட்டாவை எட்டி உதைத்ததை உறுதிப்படுத்தினார்.
வோங்குக்கு ஜூலை 31ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

