செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5d204dc3-3d38-4d37-8ea2-128c71534103
-

ஜாலான் புசாரில் கலகத்தில் ஈடுபட்டதாக எழுவர் கைது

கலகத்தில் ஈடுபட்டதன் சந்தேகத்தில் ஏழு ஆண்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் 23 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. திங்கட்கிழமையன்று இரவு 12.50 மணியளவில் ஜாலான் புசார் பகுதியில் இரண்டு கும்பல்களுக்கு இடையே சண்டை நடப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறியது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறை கேமராக்கள், பொதுமக்களிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றின் மூலம் மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்களின் அடையாளத்தைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தனர்.

உதட்டிலும் தாடையிலும் காயங்களுடன் 29 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கலகம் விளைவித்ததன் தொடர்பில் ஐவர் மீது குற்றம் சாட்டப்படும். எஞ்சிய இருவர் விசாரணையில் உதவி வருகின்றனர்.

மீண்டும் குற்றம் புரிந்தவருக்கு

12 ஆண்டுகள் தடுப்புக் காவல்

போதைப்பொருள், வன்முறை தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ள 59 வயது அப்துல் கரிம் வி.சிக்கந்தர் கத்தியைக் கொண்டு இருவர் மீது தாக்குதல் நடத்தினார். அதற்காக நேற்று அவருக்கு 12 ஆண்டுகள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது. அப்துல் கரிம் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக சிறைக்குச் சென்றதை அடுத்து 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிபந்தனைகளுடன் கூடிய ஆணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன்படி அவர் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை எந்தக் குற்றமும் புரியக்கூடாது.

ஆனால், அவர் அவ்வாண்டு ஜூன் மாதத்தில் விதிகளை மீறினார். முன்னதாக தன்னுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தவர் மீதும் தன் காதலி மீதும் அவர் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தினார்.

உடற்பயிற்சிக் கூடத்தில் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் திருட்டு

உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் மொத்தம் $173,300 மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரங்களைத் திருடியதாக அங்கு வேலை செய்யும் ஊழியர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. 24 வயது ஹாவர்ட் லாம் வென் ஜூன் உடற்பயிற்சிக் கூடத்தில் ஆண்களுக்குரிய 'லாக்கர்' பகுதியிலிருந்து $13,300 மதிப்புடைய 'ரோலெக்ஸ்' கைக்கடிகாரம் ஒன்றையும் $160,000 மதிப்புடைய 'பத்தெக் ஃபிலிப்' கைக்கடிகாரம் ஒன்றையும் திருடியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடந்த இரு திருட்டுச் சம்பவங்கள் குறித்தும் பிப்ரவரி 17ஆம் தேதியன்று காவல்துறையினர் தகவல் அறிந்தனர். அதையடுத்து இரண்டு கைக்கடிகாரங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. லாம் ஜூலையில் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.