சிறுவர்களைக் கொண்ட ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் வைத்திருந்ததற்காக 19 வயது இளையருக்கு நேற்று 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இளையரிடம் மொத்தம் 1,282 படங்களும் காணொளிகளும் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இளையருக்குப் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி அவர் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வீட்டில் இருக்க வேண்டும். மேலும், 100 மணிநேரத்திற்குச் சமூக சேவை புரிவதுடன் குற்றம் தொடர்பான மனநல ஆலோசனையும் பெற வேண்டும்.
இளையரின் நன்னடத்தையைக் கண்காணிக்க அவரின் மாற்றாந்தந்தைக்கு $5,000 பிணை விதிக்கப்பட்டுள்ளது.
சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான படங்களையும் காணொளிகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டை இளையர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புக்கொண்டார்.
குற்றம் புரிந்த சமயத்தில் இளையருக்கு 16 வயது. கனடாவின் இன்டர்போல் ஒட்டாவா சிங்கப்பூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து அதிகாரிகள் இளையரின் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது இளையரின் கைப்பேசியில் படங்களும் காணொளிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
'கிக்' எனும் கனடிய குறுந்தகவல் தளத்தை இளையர் தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் பதிவிறக்கம் செய்ததாக அறியப்படுகிறது.