உடற்பயிற்சி ஆசிரியரான 43 வயது சிங்கப்பூரர் திரு முகம்மது ரேஸா அப்துல் ரஷித், தமது மோட்டார்சைக்கிளை தாய்லாந்தில் ஓட்டிச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். மத்திய தாய்லாந்தை அடைவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு திரு ரேஸா தமது பயணத்தைத் தொடங்கியதாகவும் நேற்று முன்தினம் விபத்து நேர்ந்ததாகவும் அறியப்படுகிறது.
திரு ரேஸா தமது '2021 டுகாட்டி' மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தார்.
மருத்துவப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் திரு ரேஸாவுக்கு மருத்துவ உதவி நல்கியதை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டார்.
திரு ரேஸா ஏற்கெனவே 2014, 2017ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கும் தாய்லாந்திலிருந்து சிங்கப்பூருக்கும் இவ்வாறு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, அவரின் மரணத்தால் 'டுகாட்டி மோட்டார் கிளப் சிங்கப்பூர்' உறுப்பினர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். திரு ரேஸாவுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.