வீட்டில் குருவிகளைச் செல்லப்பிராணியாக வளர்த்து வந்தவருக்கும் அவரின் அண்டை வீட்டாருக்கும் இடையே பல காலமாக ஏற்பட்டு வந்த மோதலை அடுத்து அந்த அண்டைவீட்டுக்காரர் பூச்சிக்கொல்லியை எடுத்து இரண்டு குருவிகளை நோக்கித் தெளித்தார்.
அவரின் செயலை அவ்வழியாகச் சென்ற ஒருவர் காணொளியாகப் பதிவுசெய்ததுடன் குருவிகளுக்குச் சொந்தக்காரர்களிடமும் நடந்ததைக் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் குற்றம்புரிந்த 41 வயது சீ ஹுய்ரூவுக்கு நேற்று $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. உரத்த குரல் கொண்ட குருவிகளில் ஒன்றுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் அதற்கிருந்த இருமலும் மோசமடைந்தது.
ஆறு மாதங்கள் கழித்து அந்தக் குருவி உயிரிழந்தது. இருப்பினும் அதன் மரணம் அந்தப் பூச்சிக்கொல்லியால் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. குருவிகள் போடும் சத்தம் குறித்து புகார் அளிக்க சீயும் அவரின் கணவரும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தேசியப் பூங்காக் கழகம், நகர மன்றம் ஆகியவற்றை ஏற்கெனவே அணுகியுள்ளனர்.