தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மெர்லயன்': புதியவகை ஆர்க்கிட் மலர் கண்டுபிடிப்பு

1 mins read
377a044e-8fe1-441a-a492-2599d5e9d45b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் மலருக்கு 'மெர்லயன்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

'கிளேடிரியா லியொன்தொகெம்பஸ்' வகையைச் சேர்ந்த பூவின் மாதிரி ஒன்றை, சிங்கப்பூர் பூமலை ஆய்வாளர்கள் 2020ல் கண்டுபிடித்ததாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

"அந்தச் செடியில் பின்னர் கீழ்நோக்கிய சிறிய மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கின. 'கிளேடிரியா விரிடிஃபுளோரா' வகையின் நிமிர்ந்திருக்கும் அடர் பச்சை நிறப் பூவிலிருந்து அவை மாறுபட்டிருந்தன", என்று கழகம் கூறியது.

'லியொன்தொகெம்பஸ்' என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் மெர்லயன் என்று பொருள்.

புதிய ஆர்க்கிட் மலர் 'கிளேடிரியா' பிரிவைச் சேர்ந்த மூன்றாவது ஆர்க்கிட் வகை, அதனை இந்தோனீசியாவின் சுமத்ராவிலும் மலேசிய தீபகற்பத்திலும் காணலாம் என்று கழகம் கூறியது.

சிங்கப்பூரில் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் செய்யப்படுவதையும் ஆர்க்கிட் மலர்களைப் போன்று பரவலாக ஆய்வு நடத்தப்படும் செடி வகைகளிலும்கூட அதைக் காணமுடிவதும் மகிழ்ச்சி தருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

"இத்தகைய முயற்சிகள் சிங்கப்பூரின் செழிப்பான பல்லுயிர் பன்முகத்தன்மையைக் கட்டிக்காக்கும் உத்திகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன", என்றார் திரு லீ.