சிங்கப்பூரில் இம்மாதம் 4ஆம் தேதிக்கும் 10ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 163 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 111 சம்பவங்களைக் காட்டிலும், அது கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகம்.
நேற்று முன்தின நிலவரப்படி, டெங்கி பரவும் அபாயம் உள்ள 31 பகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. அவற்றில் மூன்றில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவானதால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தோ பாயோவில் கடந்த இரண்டு வாரங்களில் 19 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.
பெமிம்பின் வட்டாரத்தில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 28க்கு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் அங்கு ஆறு புதிய டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.
லோரோங் சுவானில், கடந்த இரண்டு வாரங்களில் ஐந்து சம்பவங்கள் பதிவானதையடுத்து அங்கு டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16க்கு உயர்ந்தது.
சென்ற சனிக்கிழமை நிலவரப்படி, இவ்வாண்டு பதிவான டெங்கிச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 3,595.
தேங்கிய நீரில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுக்களால் டெங்கி பரவுகிறது.
சமூகத்தில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை அதிக வெப்பம் மிகுந்த காலத்தின்போது சிங்கப்பூரில் டெங்கிப் பரவல் ஏற்படக்கூடும் என்று கடந்த மார்ச் மாதம் தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்திருந்தது.
இதற்கிடையே, இவ்வாண்டு இங்கு பதிவான ஸீக்கா சம்பவங்களின் எண்ணிக்கை 20க்கு அதிகரித்துள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் கூறுகிறது.
சென்ற மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 15 ஸீக்கா சம்பவங்கள் பதிவாயின. அவற்றில் 14 மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டவை.
கோவன் வட்டாரத்தில் மே 30ஆம் தேதி 11 ஸீக்கா சம்பவங்கள் பதிவாயின. நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 15க்கு உயர்ந்தது.
டெங்கி கிருமியைப்போலவே ஸீக்கா கிருமியும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது.
அந்த கொசுக்கள் சிக்குன்குனியா காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வாரியம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

