தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் கீழ்நோக்கித் திருத்தியுள்ளனர்.
முதல் காலாண்டின் மந்தநிலையும் உற்பத்தித்துறையின் பின்னடைவும் அதற்குக் காரணங்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4 விழுக்காடாகப் பதிவாகக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். கடந்த மார்ச் மாதம் அது 1.9 விழுக்காடாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டிருந்தது.
முக்கிய அம்சமாக, வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் 0.5 விழுக்காட்டுக்கு குறையும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் காலாண்டுக் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. மார்ச்சில் அது 1.3 விழுக்காடாகப் பதிவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
வங்கிக் கடன் வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு உலகப் பொருளியல் எதிர்நோக்கும் சிக்கல்களையும் வட்டி விகிதத்தின் நிச்சயமற்ற தன்மையையும் உள்ளூர் வங்கிகள் சுட்டுகின்றன.
நிறுவனங்கள் முதலீடுகளைக் குறைத்துக்கொள்வதாலும் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் செலவு செய்வதாலும் நிதித் துறை தொடர்ந்து சுருங்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
உற்பத்தியும் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதியும் பலமாத காலமாகச் சரிவுகண்டதால் பொருளியல் வளர்ச்சி குறித்த முன்னுரைப்பைக் கீழ்நோக்கித் திருத்துவது ஆச்சரியம் தரவில்லை என்று வல்லுநர்கள் கூறினர்.
முன்னதாக வளர்ச்சி காணாது என்று முன்னுரைக்கப்பட்டிருந்த உற்பத்தித் துறை, தற்போது 1.3 விழுக்காடு சுருங்கும் எனக் கருதப்படுகிறது.
சிங்கப்பூர் பொருளியலை அணுக்கமாகக் கண்காணிக்கும் 24 வல்லுநர்கள் ஆணையம் நடத்திய கருத்தாய்வில் பங்குபெற்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2.5 விழுக்காடாக இருக்கும் என்று அவர்கள் கருத்துரைத்துள்ளனர்.

