புதிய நடைமுறை: ரயில் பயணிகளுக்கு 15 நிமிடங்களில் குடிநுழைவு அனுமதி

2 mins read
30b8f92c-d356-447a-9673-fff492900c4e
-

உட்­லண்ட்ஸ் ரயில் சோத­னைச் சாவ­டி­யில் பயணிகள் தாங்களாகவே குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்ய உதவும் 10 இயந்­தி­ரங்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அவற்­றால் ரயில் பய­ணி­கள் குடி­நு­ழைவு நடை­முறையை நிறைவு செய்­யும் நேரம் பாதி­யா­கக் குறை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஒரு ரயி­லின் பய­ணி­கள் அனை­வ­ரும் பதி­னைந்தே நிமி­டங்­களில் குடி­நு­ழைவு நடை­முறையை நிறைவு செய்ய அந்த இயந்­தி­ரங்­கள் வழி­வ­குக்­கும்.

ரயில் சோத­னைச் சாவடி அத்­த­கைய இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­படுத்­தும் முதல் இடம் என்று குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று கூறி­யது.

சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள், இங்­கி­ருந்து வெளி­யே­றும் பய­ணி­கள் என இரு­த­ரப்­பி­ன­ருமே அந்த இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­படுத்த இய­லும்.

அதி­காரி பணி­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் குடி­நு­ழைவு முகப்­பில் ஒரு பயணி குடி­நு­ழைவு நடை­மு­றை­களை நிறைவு செய்ய இப்­போது 45 விநா­டி­கள் தேவைப்­படு­கிறது. புதிய இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போது சரா­ச­ரி­யாக 24 விநா­டி­கள் போதும் என்று ஆணை­யம் சொல்­லிற்று.

குடி­நு­ழைவு நடை­முறை விரை­வாக நிறைவு பெறு­வ­தால் அதி­கா­ரி­கள் சிலரை வேறு பணி­களில் ஈடு­ப­டுத்த இய­லும் என்­பதை அது சுட்­டி­யது.

அன்­றா­டம் அதி­க­பட்­ச­மாக 31 ரயில் சேவை­கள் மூலம் ஏறத்­தாழ 10,000 பய­ணி­கள் உட்­லண்ட்ஸ் ரயில் சோத­னைச் சாவ­டி­யைக் கடந்து செல்­கின்­ற­னர்.

மலே­சி­யா­வின் கேடி­எம் ரயில் நிறு­வ­னம் ஜேபி சென்ட்­ர­லில் இருந்து உட்­லண்ட்­சுக்கு 18 சேவை­க­ளை­யும் மாற்­று­வ­ழி­யில் 13 சேவை­க­ளை­யும் வழங்­கு­கிறது.

புதிய இயந்­தி­ரங்­கள் மட்­டு­மன்றி தானி­யக்க குடி­நு­ழை­வுத் தடங்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் சேவை வழங்­கும் முகப்­பு­க­ளை­யும் பயன்­ப­டுத்த இய­லும் என்று ஆணை­யம் கூறி­யது.

சிங்­கப்­பூர்­வா­சி­களும் நீண்­ட­கால, குறு­கி­ய­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ரும் புதிய நடை­மு­றை­யைப் பின்­பற்­ற­லாம்.