செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
bffc8e98-3507-49e3-b748-878e226dd4f6
-

பணிப்பெண்கள் தொடர்பான விதிமீறல்; அமைச்சு விசாரணை

'ஆர்சிஎஸ்எல்' எனப்படும் ரெட் கிரௌன்ஸ் முதியோருக்கான வசிப்பிடத்தில் வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியது தொடர்பில் விதிமீறல் இடம்பெற்றதா என்று மனிதவள அமைச்சு விசாரணை நடத்திவருகிறது.

முதிய வாடிக்கையாளர்களின் நலன், இல்லப் பணிப்பெண்களின் நலன் என இரு அம்சங்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளதாக அமைச்சு ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது. 'ஆர்சிஎஸ்எல்' நிறுவனத்தின் நடைமுறைப்படி, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நான்கு முதியவர்களும் அவர்களைப் பராமரிக்க இரு வெளிநாட்டுப் பணிப்பெண்களும் இருப்பர். அதற்கான மாதக் கட்டணம் $2,900 முதல் $6,300 வரை வசூலிக்கப்படுகிறது. முதியவர்களில் இருவர் அந்தப் பணிப்பெண்களுக்கு முதலாளிகள். சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், முதலாளிகள் பணிப்பெண்களின் உணவு, பாதுகாப்பு, தங்குமிட வசதி, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றுக்குப் பொறுப்பேற்பர். ஆனால் 'ஆர்சிஎஸ்எல்' முதியவர்கள் அனைத்து அம்சங்களுக்கும் பொறுப்பேற்பதில்லை என்று தெரியவந்ததாக அமைச்சு கூறியது. அதுகுறித்த முழுமையான புரிதல் அவர்களுக்கு இல்லை என்றும் அது குறிப்பிட்டது.

வரிசையில் வராமல் ஏமாற்றிய மலேசிய கார் ஓட்டுநருக்கு அனுமதி மறுப்பு

சென்ற சனிக்கிழமை மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஆடவர் ஒருவர் வரிசையில் காத்திருக்காமல் லாரி, பேருந்துகளுக்கான தடத்தைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் இரண்டு தடங்களிலும் வாகன நெரிசலைக் காட்டும் அக்காணொளியில் அந்த காருக்குப் பின்னால் பேருந்து ஒன்று செல்வதும் தெரிகிறது.

துணைக்காவல் படை அதிகாரிகள் இருவர் காரை நிறுத்துவதும் அவர்களில் ஒருவர் சற்றே நகர்ந்தபோது அந்த கார் விரைந்து சென்றதையும் காணொளி காட்டுகிறது. துணைக்காவல் படை அதிகாரி காரை திருப்பி மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையச் சொன்னதை மீறி அதன் ஓட்டுநர் அபாயகரமாக அதை ஓட்டிச் சென்றதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.