கருத்தாய்வு: சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில் வேலை செய்யும் வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச வருமானம் இல்லை

கருத்தாய்வு: சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில் வேலை செய்யும் வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச வருமானம் இல்லை

1 mins read
b471513d-783d-4471-a31c-0b5ac7cfba27
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பேங்காக்: சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் பலருக்குக் குறைந்தபட்ச சம்பளம்கூட வழங்கப்படுவதில்லை என்று ஒரு கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது.

அனைத்துலக ஊழியர் அமைப்பு (ஐஎல்ஓ) நடத்திய கருத்தாய்வில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

மூன்று நாடுகளில் சிங்கப்பூரில்தான் இல்லப் பணியாளர்கள் ஆக அதிக நேரம் வேலை பார்ப்பதாகவும் கருத்தாய்வின் முடிவுகள் தெரிவித்தன.

சிங்கப்பூரில் சராசரியாக ஓர் இல்லப் பணியாளர் நாள்தோறும் 12.8 மணிநேரமும் வாரந்தோறும் 81 மணிநேரமும் வேலை செய்கிறார்; சராசரியாக ஒரு பணியாளருக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் 480 டாலர் (645 வெள்ளி).

பணியாளர்களின் வேலை நேரத்தைக் கருத்தில்கொள்ளும்போது இந்தத் தொகை மிகவும் குறைவு என்று குறிப்பிடப்பட்டது.

அவர்களின் சொந்த நாடுகளில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் இந்தச் சம்பளம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு இல்லப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக வேலை வாங்கும் போக்கு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் காணப்பட்டதாக ஐஎல்ஓ கூறியது.

சம்பளமின்றி கூடுதல் நேரம் வேலை பார்ப்பது, வேலையிலிருந்து விலக அனுமதி வழங்கப்படாமல் இருப்பது உள்ளிட்டவை வலுக்கட்டாயமாக வேலை வாங்கும் நடவடிக்கைகளில் அடங்கும்.

610 முதலாளிகளையும் வெளிநாடுகளிலிருந்து வந்த 1,201 இல்லப் பணியாளர்களையும் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கருத்தாய்வு நடத்தப்பட்டது.