தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணிப்பெண் மரணம்: காணொளிகளை மறைக்க முயன்றதை ஒப்புக்கொண்ட மாது

2 mins read
2e426aa4-9468-4c41-9dc8-62d4791148f8
குற்றவாளி பிரேமா நாராயணசாமி (இடது), மாண்ட பணிப்பெண் பியாங் இங்காய் டொன். கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தன் வீட்டில் வேலை செய்த மியன்மார் பணிப்பெண்ணை இறக்கும்வரை துன்புறுத்திய மாது, துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவான காணொளிகளை மறைக்க முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மாதின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

சம்பவங்கள் இடம்பெற்ற காணொளிகளை மறைக்குமாறு தன் மருமகனைத் தூண்டியதை பிரேமா எஸ். நாராயணசாமி ஒப்புக்கொண்டார்.

முன்னாள் காவல்துறை அதிகாரியும் பிரேமாவின் முன்னாள் மருமகனுமான கெவின் செல்வமும் இவ்விவகாரம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

64 வயது பிரேமா, தன் 43 வயது மகள் காயத்திரி முருகையனுடன் சேர்ந்து பியாங் இங்காய் டொன் எனும் பணிப்பெண்ணைத் துன்புறுத்தினார்.

பணிப்பெண்ணுக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியது, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயன்றது ஆகியவற்றின் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்டிருந்த 47 குற்றச்சாட்டுகளை பிரேமா முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு 14 அண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மணவிலக்கு மூலம் கெவின் செல்வத்தைப் பிரிந்துவிட்ட காயத்திரிக்கு 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பணிப்பெண் துன்புறுத்தல் வழக்கில் ஒருவருக்கு இத்தனை ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

2015ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதியன்று பிரேமா குடும்பத்துக்குப் பணியாற்றத் தொடங்கியபோது திருவாட்டி பியாங் இங்காய் டொனின் உடல் எடை 39 கிலோவாக இருந்தது.

2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியன்று தமது 24 வயதில் அவர் மாண்டுபோனார்.

அப்போது அவரின் உடல் எடை 24 கிலோவாகக் குறைந்திருந்தது.