சிங்கப்பூரில் பிரதான செய்தி ஊடகங்கள் மிக நம்பகமான செய்தித்தளங்களாகத் திகழ்கின்றன. 2022ஆம் ஆண்டில் செய்திகள் மீது ஒருவர் கொள்ளும் ஒட்டுமொத்த நம்பிக்கை தொடர்ந்து நிலையாக இருந்ததாக ராய்ட்டர்ஸ் கழகத்தின் இவ்வாண்டுக்கான மின்னிலக்கச் செய்தி அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் மிக நம்பகமான செய்தித்தளங்களின் பட்டியலில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இரண்டாவது இடத்தில் வந்தது. மீடியாகார்ப் ஒளிவழி 5இன் செய்தியும் அதே இடத்தைப் பிடித்தது. 73 விழுக்காட்டினர் ஒளிவழி 5இன் செய்திகளை நம்புவதாகக் கூறினர். சேனல் நியூஸ் ஏஷியா 75 விழுக்காட்டைப் பெற்று முதல் இடத்தில் வந்தது.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்தாய்வில், சராசரியாக 40 விழுக்காட்டினர் மட்டுமே பெரும்பாலான செய்திகளைப் பெரும்பாலான நேரங்களில் நம்புவதாகக் கூறினர். சிங்கப்பூரில் அது 45 விழுக்காடாகப் பதிவானது. 2022இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 43 விழுக்காட்டைக் காட்டிலும் இது அதிகம்.
இணையத்தில் பெறப்படாத செய்திகளைப் பொறுத்தவரை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகப் பிரபலமாகத் திகழ்ந்தது. 37 விழுக்காட்டினர் சென்ற ஆண்டைப் போலவே அந்த நாளிதழை வாரந்தோறும் படிப்பதாகக் கூறினர். சேனல் நியூஸ் ஏஷியா 33 விழுக்காட்டுடன் அடுத்தபடியாக வந்தது. ஒளிவழி 8இன் செய்தி மூன்றாவது இடத்தில் 26 விழுக்காட்டுடன் வந்தது.
இதற்கிடையே, இணையத்தில் பெறப்படும் செய்திகளைப் பொறுத்தவரை, 'மதர்ஷிப்' ஆக அதிகமாக மக்கள் நாடிய ஒன்றாக விளங்குகிறது.
48 விழுக்காட்டினர் அதனை வாரந்தோறும் பார்ப்பதாகக் கூறினர். 46 விழுக்காட்டினர் சேனல் நியூஸ் ஏஷியாவிலிருந்தும் 42 விழுக்காட்டினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிலிருந்தும் செய்திகளைப் பெற்றனர்.
இங்கு இணையத்திலும் சமூக ஊடகத்திலும்தான் செய்திகள் பொதுவாகப் பெறப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தொலைக்காட்சியிலிருந்தும் செய்தித்தாளிலிருந்தும் செய்திகள் பெறும் போக்கு கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது.
யூடியூப், இன்ஸ்டகிராம், டிக்டாக் ஆகியவை செய்திகள் பெறுவதற்கான தளங்களாக மேம்பட்டன. ஆனால் ஃபேஸ்புக்கில் செய்திகள் பெறும் போக்கு குறைந்துள்ளது.
வாட்ஸ்அப், செய்திக்காக மிகப் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்ட சமூகச் செயலியாகத் தொடர்ந்தது.
மக்கள், செய்தி இணையத்தளங்களிலிருந்தும் செயலிகளில் இருந்தும் செய்திகளைப் பெறுவது குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் அதே போக்கு காணப்பட்டது.
அவர்கள் சமூக ஊடகத் தளங்களிலிருந்து செய்திகளைப் பெற விரும்புகின்றனர். சமூக ஊடகச் சூழலில் வளர்ந்த இளையர்களே இந்தப் போக்கிற்கு முக்கியக் காரணம் என்று அறிக்கை கூறியது.

