இவ்வாண்டிற்கான தேசிய தின அணிவகுப்பின் அன்பளிப்புப் பை நேற்று வெளியிடப்பட்டது. இருபத்து நான்குக்கும் மேற்பட்ட கலைஞர்களின் படைப்புகள் அந்தப் பையில் இடம்பெற்று உள்ளன. அன்பளிப்புப் பையில் நான்கு கலைப் படைப்புகளில் ஒன்று சிறப்பு அம்சமாக இடம்பெறுகிறது.
தேசிய தின அணிவகுப்பு 2023இன் நிர்வாகக் குழுவுக்கும் எஸ்ஜி எனேபல் அமைப்புக்கும் இடையிலான கூட்டு முயற்சியே அது.
உடற்குறையுள்ளவர்களின் கலைப் படைப்புகளை தேசிய தின அணிவகுப்புப் பொருள்களில் வெளிக்காட்டுவதற்கு, தேசிய தின அணிவகுப்பின் நிர்வாகக் குழு, எஸ்ஜி எனேபலுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இணைந்து செயல்படுகிறது.
அந்த நான்கு கலைப்படைப்புகளிலும் வெவ்வேறு சமூக சேவை அமைப்புகளையும் சிறப்புத் தேவை பள்ளிகளையும் சேர்ந்த உடற்குறையுள்ள 21 பேர், உயர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த நான்கு எஸ்ஜி எனேபல் மாணவர் தொண்டூழியர்கள் ஆகியோரின் 140 கலைப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
அந்தப் படைப்புகளைப் பார்வையிட்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், ரெட்ஹில்லில் உள்ள எனேபலிங் வில்லேஜின் யுஓபி அபிலிட்டி ஹப்பில் இருந்த கலைஞர்களைச் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
"இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் அன்பளிப்புப் பையை வடிவமைக்க வெவ்வேறு வயதினரும் சிறப்புத் தேவை உடையோரும் ஒன்றிணைந்து செயல்பட்டதைக் காண ஊக்கம் அளிக்கிறது", என்று கலைப் படைப்புகளை நினைவுகூர்ந்து பேசியபோது, பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார்.
இங்கு காணப்படும் பன்முகத்தன்மை எவ்வாறு நம்மை ஒன்றிணைக்கச் செய்கிறது என்பதை அவர்களின் புத்தாக்கமான வடிவமைப்புகள் காட்டுவதாகவும் அந்தப் பன்முகத்தன்மை சிங்கப்பூர் இவ்வுலகில் தழைத்தோங்கிப் பொலிவுபெறுவதற்கு வகைசெய்வதாகவும் அவர் சொன்னார்.

