அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ள திரு ஜார்ஜ் கோ, அதில் போட்டியிடுவதற்கான தமது தகுதி நிலையைத் தற்காத்துப் பேசியுள்ளார். தமது தகுதியை மதிப்பிட நிபுணர் குழு ஒன்றை தாம் அமைத்துள்ளதாக அவர் கூறினார்.
இது குறித்து திரு கோவின் ஊடகக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், நிபுணர் குழுவில் வழக்கறிஞர்களும் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டது.
"அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திரு கோவின் முடிவு, திடீரென எடுக்கப்பட்ட ஒன்றல்ல. இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு. அதே வேளையில், தமது தகுதிநிலை குறித்து முடிவெடுப்பது அதிபர் தேர்தல் குழுவின் கையில் இருப்பதை திரு கோ நினைவில் வைத்துள்ளார்," என்று திரு கோவின் ஊடகக் குழு கூறியது.
ஓசியா இன்டர்நேஷனல் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான திரு கோ, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது தகுதி குறித்த கேள்விகள் எழுந்து உள்ளன.
தமது தகுதியை நிரூபிக்க, திரு கோ தனியார் துறை அனுபவத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கூறியிருந்தனர்.
கடந்த 40 ஆண்டுகளில் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் உரிமையாளராக திரு கோ விளங்கியதாக அவரது குழு கடந்த திங்கட்கிழமை கூறியது.
இதற்கிடையே, வாட்ஸ்அப்பில் வலம் வந்த புகைப்படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுபவர் தாம் கிடையாது என்பதை திரு கோ நேற்று முன்தினம் தெளிவுபடுத்தினார்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற திரு ஜார்ஜ் கோ தியோங் யோங், கம்போங் உபி குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தவர்.
"நாங்கள் விசாரித்துப் பார்த்ததில், படத்தில் இருந்தவர் திரு ஜார்ஜ் கோ தியோங் யோங். திரு ஜார்ஜ் கோ சிங் வா அல்ல.
"திரு ஜார்ஜ் கோ சிங் வா குடிமக்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராகக்கூட இருந்ததில்லை. அவருக்கு எப்போதும் அரசியல் தொடர்பு இருந்ததில்லை," என்று திரு கோவின் ஊடகக் குழு தெரிவித்தது.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட தம் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ள இரண்டாமவர் திரு கோ.