செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5151a80e-bd0b-4206-863d-d549ed01a4fd
-
multi-img1 of 2

வான்கூவர்-சிங்கப்பூர் இடையே நேரடி விமானச் சேவை தொடங்கப்படும்

கனடாவின் வான்கூவர் நகருக்குச் செல்லவிருக்கும் சுற்றுப்பயணிகள் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து ஏர் கனடாவின் (படம்) நேரடி விமானச் சேவையைப் பயன்படுத்தலாம்.

அந்த இடைவிடா விமானச் சேவை போயிங் 787 ரக டிரீம்லைனர் விமானத்துடன் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும். சுற்றுப்பயணிகள் விமான நிறுவனத்திடமும் பயண முகவர்களிடமும் இருக்கைகளை நேரடியாக முன்கூட்டியே தெரிவுசெய்யலாம்.

கனடாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் இடைவிடா விமானச் சேவை இது மட்டுமே என்று சாங்கி விமான நிலையக் குழுமமும் ஏர் கனடாவும் நேற்று முன்தினம் தெரிவித்தன.

வரும் அக்டோபரிலிருந்து சிங்கப்பூருக்கும் வான்கூவருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவையை நிறுத்தப்போவதாக இவ்வாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) கூறியிருந்தது. எஸ்ஐஏ முதன்முதலில் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த விமானச் சேவையை வழங்கியது.

வெவ்வேறு சந்தைகளின் தேவைக்கு ஏற்ப கொள்ளளவை மாற்றிவருவதாக எஸ்ஐஏ கூறியது.

'தள்ளுபடி விலையில் சொகுசு கைப்பை விற்பனை' எனும் மோசடி விளம்பரம்

தக்கஷிமாயா பகுதிவாரிக் கடையின் போலியான ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை மோசடிக்காரர்கள் உருவாக்கி உள்ளனர். சொகுசு கைப்பை சின்னமான 'ஷெனல்' தாராளமான விலைத் தள்ளுபடியுடன் விற்கப்படுவதன் தொடர்பில் மோசடி விளம்பரத்தை (படம்) மோசடிக்காரர்கள் அப்பக்கத்தில் காட்டுகின்றனர்.

இன்னும் இயங்கும் அந்த ஃபேஸ்புக் விளம்பரம், வாடிக்கையாளர்களின் ஆதரவுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில், 'ஷெனல்' நிறுவனத்துடன் சேர்ந்து இணைய நிகழ்ச்சியை தக்கஷிமாயா தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது.

இதில் 'ஷெனல் 22' கைப்பை, 99 விழுக்காடு விலைத் தள்ளுபடியுடன் $138க்கு விற்கப்படுவதாக விளம்பரத்தில் கூறப்படுகிறது.

ஷெனலின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில், 'ஷெனல் 22' கைப்பை $8,710க்கு விற்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அதிகாரபூர்வமற்ற தளங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் அல்லது பதிவுகள் குறித்து கவனமாக இருந்து அவற்றைத் தடை செய்யும்படி வாடிக்கையாளர்களிடம் தக்கஷிமாயா இணையப் பக்கம் அறிவுறுத்தியுள்ளது.

"இந்தக் கணக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். நிலவரத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்," என்று தக்கஷிமாயா கூறியது.