அனைத்துலக தொழிலாளர் சங்க ஆய்வு: சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில்
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில் உள்ள இல்லப் பணிப்பெண்கள் குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக வருவாய் ஈட்டுவதாக அனைத்துலக தொழிலாளர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் இந்த மூன்று நாடுகளையும் சேர்ந்த 610 முதலாளிகள், 1,201 இல்லப் பணிப்பெண்கள் பங்கேற்றனர்.
அத்துடன், இவர்களது வேலையிடச் சூழலும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இல்லப் பணிப்பெண்கள் தேவை மிகுதியாக உள்ள, மற்றவர்களுடன் தெளிவாக தொடர்பு கொள்ளும் திறன், மற்றவர்களின் உணர்வுகளுக்கு ஈடுகொடுப்பது போன்ற பணிகளில் பணிப்பெண்கள் ஈடுபடுவதாக கடந்த 2022ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தகவல்கள் கூறுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் மூன்று நாடுகளில் உள்ள பணிப்பெண்களை ஒப்பிடும்போது குறிப்பாக சிங்கப்பூர் பணிப்பெண்கள் அதிக நேரம், தினமும் சராசரியாக 12.8 மணிநேரமும் வாரம் 81 மணிநேரம், பணிபுரிவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது, மற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் அதிகபட்சமாக 44 மணிநேரம் வேலை பார்க்கும் நிலையில், இல்லப் பணிப்பெண்கள் கிட்டத்தட்ட இரண்டு பங்கு வேலை பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. அவர்கள் பார்க்கும் வேலைநேரத்துடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு கிடைக்கும் சராசரி மாத வருமானமான அமெரிக்க டாலர் 480 (S$645) அந்த ஊழியர்களின் நாடு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இவற்றுடன், மலேசியா, தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பணிப்பெண்கள் வேலைக்காக இங்கு வருவதற்கு தங்கள் ஊதியத்தில் அதிக அளவு பணம் செலவழிக்கின்றனர் என்றும் இந்த அனைத்துலக ஆய்வு கூறுகிறது.

