சிலேத்தார் விரைவுச்சாலையின் (எஸ்எல்ஈ) துணைச் சாலையில் சரக்கு வாகனம் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 44 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அந்தத் துணைச்சாலை மூடப்பட்டது.
சிலேத்தார் விரைவுச்சாலை யிலிருந்து தீவு விரைவுச் சாலையை நோக்கி புக்கிட் தீமா விரைவுச் சாலைக்குச் செல்லும் வழி மூடப்பட்டதாக மதியம் 1.21 மணிக்கு வெளியிட்ட ட்விட்டர் பதிவில் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
ஆறு நிமிடங்களுக்குப் பிறகு அது வெளியிட்ட மற்றொரு பதிவில், உட்லண்ட்ஸ் அவென்யூ 2 வெளியேறும் சாலைவரை அந்த விரைவுச் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.
இணையக் குழுக்களில் பரவும் புகைப்படங்கள், காணொளிகளில், இருவழிச் சாலையின் இடது பாதையில் ஒரு பச்சை நிற சரக்கு வாகனம் வலது பக்கமாக கவிழ்ந்திருப்பதையும், செந்நிற மண்ணும் கற்களும் வலது பக்க தடம் வரை பரவியிருப்பதையும் காட்டுகின்றன.
விபத்து குறித்து பகல் 1.08 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது 44 வயது ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை குறிப்பிட்டது.

