வாடகை மோசடியில் பலரை ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்ட பின்னர், பிணையில் வெளிவந்த 24 வயது பட்டேல் தாவல்குமார் சந்துபாய் தனது அறை நண்பரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றார்.
இந்திய நாட்டவரான பட்டேல் தாவல்குமார் சந்துபாய்க்கு நேற்று 14 மாதம், 14 வார சிறை விதிக்கப்பட்டது. கடவுச்சீட்டு சட்டத்தின்கீழ் ஒரு குற்றம் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மற்ற குற்றச்சாட்டுகள் வாடகை மோசடி தொடர்பானவை.
தான் குடியிருக்கும் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஓர் அறை வாடகைக்குத் தருவதாக பட்டேல், சிங்கப்பூருக்கு படிக்க வந்த நான்கு பேரை ஏமாற்றியுள்ளார். அந்த வீட்டில் எத்தனை அறைகள் இருந்தன, எந்த வகையான வீடு என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
2022 மே மாதம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமிருந்தும் $500 வாடகையை வாங்கிய பட்டேல், வீட்டின் வாடகைதாரர்கள் பகிர்ந்து கொள்ளும் மளிகைப் பொருள்களுக்காக ஒருவரிடமிருந்தும் கூடுதலாக $200 கேட்டுள்ளார். பணத்தை வாங்கியதும் குறுகிய பயணத்திற்காக மலேசியா செல்வதாக அந்த வீட்டிலிருந்து கிளம்பிய பட்டேலை பின்னர் தொடர்புகொள்ள முடியவில்லை.
பட்டேல் மாதாந்திர வாடகையை செலுத்தவில்லை என்றும், பணம் செலுத்துவதை தாமதப்படுத்த சாக்குப்போக்கு கூறி வருவதாகவும் கூறிய வீட்டு உரிமையாளர், பாதிக்கப்பட்டவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கோரினார்.
பாதிக்கப்பட்டவர்கள் படேலுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். மே 29 அன்று சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குச் செல்ல முயன்றபோது பட்டேல் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்து ஜூன் 3ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார், நீதிமன்ற அனுமதியின்றி சிங்கப்பூரைவிட்டு வெளியே பயணம் செய்யக்கூடாது என்பதை அறிந்திருந்தார்.
2023 மார்ச்சில், பட்டேலுடன் தங்கியிருப்பவர் கைப்பேசி வாங்குவதற்காக தனது கடவுச்சீட்டை பட்டேலிடம் கொடுத்திருந்தார்.
மார்ச் 20ஆம் தேதி நண்பரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, துவாஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவரது முகம், கருவிழி, கைரேகைப் பதிவுகள் உண்மையான கடவுச்சீட்டு வைத்திருப்பவருடன் பொருந்தவில்லை. குடிநுழைவு அதிகாரி அவரிடம் விவரங்களைக் கேட்டபோது, பட்டேல் தனது நண்பரின் விவரங்களைச் சொன்னார்.
மேலும் விசாரித்தபோது, நண்பரின் மாணவர் அனுமதி அட்டையின் மின்னிலக்க நகலை வழங்கினார்.
அதிகாரிகள் பின்னர் பட்டேலின் கைப்பேசியில் அழிக்கப்பட்ட அவரது சொந்த கடவுச்சீட்டின் புகைப்படத்தை கண்டுபிடித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

