சிங்கப்பூரில் நேற்று $77 மில்லியன் மதிப்பிலான புதிய சூரியசக்தி ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செயல்திறனுடன் சிக்கனமான சூரியசக்தி மின்கலத் தொழில்நுட்பங்களுக்கான ஆய்வையும் புத்தாக்கத்தையும் மேம்படுத்த உதவுவது நோக்கம்.
சிங்கப்பூர் சூரியசக்தி ஆய்வுக் கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 'ஆர்இசி சோலார்' நிறுவனமும் இணைந்து அந்த ஆய்வுக் கூடத்தை நிறுவியுள்ளன.
துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் அதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சூரியசக்தி மின்கலத்தின் தற்போதைய எரிசக்தி மாற்றுச் செயல்திறன் விகிதம் கிட்டத்தட்ட 22 முதல் 23 விழுக்காடாக உள்ளதை அவர் குறிப்பிட்டார்.
சூரியசக்தித் தகடுகள் வழக்கமாக சிலிக்கானால் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு தகட்டிலும் 36 முதல் 144 மின்கலங்கள் வரை பொருத்தப்பட்டிருக்கும்.
அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதால், சூரியசக்தி மின்கலன் தொடர்பான வர்த்தகம் வலுப்படும் என்றார் திரு ஹெங். சிங்கப்பூரில் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்திப் பயன்பாட்டுக்கு மிக முக்கியமாக விளங்கும் சூரிய சக்தியின் விரிவான பயன்பாட்டுக்கும் அது உதவும் என்றார் அவர்.
சிங்கப்பூர் பசுமைத் திட்டத்தின்கீழ், 2030க்குள் குறைந்தது இரண்டு கிகாவாட் சூரியசக்தியைப் பயன்படுத்த சிங்கப்பூர் திட்டமிடுகிறது. இது 350,000 குடும்பங்களின் வருடாந்தர மின்சாரத் தேவைக்குச் சமம்.
இரண்டு மின்கலங்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்குவதன் மூலம் சூரியசக்தித் தகடுகளின் செயல்திறனை அதிகரிப்பது இந்த இலக்கை எட்டுவதற்கான ஓர் உத்தேசத் தீர்வு என்றார் திரு ஹெங்.