தென்கிழக்காசியாவில் பலதரப்புகளுடனும் நட்பு வட்டங்களை உருவாக்க சிங்கப்பூர் விரும்புவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆதிக்கப் போரில் இவ்வட்டார நாடுகள் எந்தத் தரப்பை ஆதரிப்பது என்று முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதை சிங்கப்பூர் விரும்பவில்லை என்றார் அவர்.
அமெரிக்காவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் பாலகிருஷ்ணன், வாஷிங்டனில் வெளியுறவுக் கொள்கை சார்ந்த வல்லுநர்களிடையே உரை ஆற்றினார்.
"அமெரிக்கா, சீனா, ஐரோப்பா ஆகியவற்றுக்கு தென்கிழக்காசியாவின் அமைதி, வளப்பம், மேம்பாடு ஆகிய அம்சங்களில் பங்களிக்க வாய்ப்பளிக்க விரும்புகிறோம். இதன்மூலம், அதிகாரச் சமநிலையை எட்ட முடியும் என்று கருதுகிறோம்," என்றார் அவர்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் அவ்வாறு கருத்துரைத்துள்ளார். இருதரப்புக்குமிடையிலான பதற்றங்களால் நல்லுறவைக் கட்டிக்காப்பதில் அவை சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
புதிய உலக ஒழுங்குமுறையில், வல்லரசாக அமெரிக்கா மட்டுமே கோலோச்சிய நிலை மாறி சீனா, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சியால் பன்முகத்தன்மை அதிகரிப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பலதரப்புக் கட்டமைப்புகளும் விதிமுறைகளும் தேவை என்பதையும் காலத்துக்கேற்ப அவற்றில் மாற்றம் கொண்டுவருவது அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
இவ்வார இறுதியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனா செல்லவிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் பாலகிருஷ்ணன், அத்தகைய நேரடி சந்திப்புகள் பதற்றத்தைத் தணிக்க உதவும் என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேம்படுத்துவதும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை ஆழப்படுத்துவதும் அவரது அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் என்று வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமது அமெரிக்கப் பயணத்தின் ஓர் அங்கமாக, நாளை மறுநாள் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டத்தில் கடல்வாழ் பல்லுயிரிகள் பற்றிய சிங்கப்பூரின் தேசிய அறிக்கையை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.

