சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் (எஸ்ஐஏ) அதன் மலிவுக் கட்டணச் சேவைப் பிரிவான 'ஸ்கூட்'டும் இணைந்து சென்ற மாதம் 2.8 மில்லியன் பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளன. ஆண்டு அடிப்படையில் அந்த எண்ணிக்கை 65.8 விழுக்காடு உயர்ந்துள்ளது.
விமானப் பயணத்துக்கான தேவை வலுவாக இருப்பதை இது காட்டுவதாக எஸ்ஐஏ நேற்று வெளியிட்ட மாதாந்தர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
'ஸ்கூட்' பிரிவு சென்ற மாதம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளது. சென்ற ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், அது இருமடங்குக்குமேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் ஐஏ விமானச் சேவையை சென்ற மாதம் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 41.7 விழுக்காடு அதிகரித்து 1.8 மில்லியனாக இருந்தது.
சென்ற மாதம் எஸ்ஐஏ 74 நகரங்களுக்கு சேவை வழங்கியவேளையில், ஸ்கூட் 63 நகரங்களுக்கு சேவை வழங்கியது.
இதற்கிடையே, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 25.1 விழுக்காட்டுப் பங்கை வகிக்கும் எஸ்ஐஏ அதனை 40 விழுக்காட்டிற்கு உயர்த்தத் திட்டமிடுவதாக வெளியான தகவலை அது மறுத்தது.
'மின்ட்' செய்தித்தாளில் வெளியான அத்தகவல் தவறானது என்று எஸ்ஐஏ கூறியது.
சென்ற ஆண்டு நவம்பரில் ஏர் இந்தியாவும் எஸ்ஐஏவும் இணைந்து விஸ்தாரா எனும் பெயரில் விமானச் சேவை வழங்குவது குறித்து டாடா நிறுவனம் அறிவித்தது.