தெம்பனிசில் உள்ள உணவுக் கடை ஒன்றில் 57 வயது ஆடவரை வியாழக்கிழமை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் 56 வயது ஆடவர் ஒருவர் கைதானார்.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததை ஒட்டி அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
புளோக் 513 தெம்பனிஸ் சென்ட்ரல் 1ல் பிற்பகல் 12.40 மணியளவில் உதவி கேட்டு தனக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.
அந்தச் சம்பவம் பற்றி கூறிய யூ-டேஸ்ட் உணவகத்தில் கோழிச்சோறு விற்கும் திரு ஸ்கை வூ, 43, என்பவர், தான் நண்பகல் வாக்கில் காப்பி குடித்துக்கொண்டு இருந்த ஆடவர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.
"அவர்கள் இருவரும் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் திட்டத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் தமது பையிலிருந்து மடக்குக் கத்தியை எடுத்து மற்றோர் ஆடவரிடம் காட்டினார்," என்று திரு வூ சொன்னார்.
கத்தி வைத்திருந்த ஆடவர், மற்றோர் ஆடவரைக் கீழே தள்ளிவிட்டு அவரைப் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது.
"பாதிக்கப்பட்டவர் எழுந்து நின்று, அந்த ஆடவரை அடிக்க அங்கிருந்த நாற்காலியை எடுத்தார். ஆனால், அவர் தடுமாறினார்," என்றும் திரு வூ கூறினார்.
காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர் என்று திரு வூ சத்தமிட்ட பிறகு சந்தேக ஆடவர் அங்கிருந்து தப்பியோடினார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஆடவர் பாதி சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.

