தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொந்த ஊரில் வினோத்குமார் நல்லுடல்

2 mins read
784084ab-48b0-4d57-95c2-579ab7561aa1
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தஞ்சோங் பகார் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்த வினோத்குமார் திருப்பதியின் நல்லுடல் ஜூன் 17 இரவு 10.30 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

வினோத்குமாரின் பாட்டியின் இளைய சகோதரரான ராஜமாணிக்கம் திருப்பதியும், 44, தாய்மாமன் கார்த்திக் சாமுடியும், 29, உடன் சென்றுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரை விமானத்திலும் அதன் பின் அங்கிருந்து சொந்த ஊருக்கு மருத்துவ அவசர ஊர்தி வழியாகவும் அவரின் நல்லுடல் எடுத்துச்செல்லப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை வினோத்குமார் பணிபுரிந்த 'அய்க் சன் டிமோலிஷன் அண்ட் இன்ஜினியரிங்' நிறுவனம் செய்துள்ளது.

வினோத்குமார், சிறுவயதுமுதலே தன் தாயாரின் சொந்த ஊரான தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்டறம்பள்ளி கிராமத்தில் பெற்றோர், தம்பி, உறவினருடன் வளர்ந்தவர்.

சம்பவம் நிகழ்ந்ததும் ஜூன் 15ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 2 மணியளவில் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தினர் பலரும் நாட்டறம்பள்ளி வீட்டில் கூடினர்.

குடும்ப வழக்கப்படி வினோத்குமாரின் தந்தையின் பூர்வீக ஊரான வாணியம்பாடியில் உள்ள வீராணமலை கிராமத்தில் இறுதிச் சடங்குகளைச் செய்ய குடும்பத்தினர் முடிவுசெய்துள்ளதாக கார்த்திக் சாமுடி தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், பல கனவுகளுடன் சிங்கப்பூர் வந்த வினோத்தை இப்படி சவப்பெட்டியில் திருப்பிச் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வேன் என்று கனவிலும்கூட நினைக்கவில்லை என்று கூறி கண்ணீர் வடித்தார்.

வினோத்குமார் பணிபுரிந்த நிறுவனம் இப்போதைய செலவுகளுக்கும் இதர தேவைகளுக்கும் $10,000 அளித்துள்ளதாக ராஜமாணிக்கம் கூறினார். காப்பீட்டுத் தொகை பற்றிய விவரங்கள் இனிமேல் நிறுவனத்துடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றாரவர்.

குறிப்புச் சொற்கள்