சபிதா ஜெயகுமார்
சிங்கப்பூரின் 58வது பிறந்தநாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாட நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறும் ஒரு புதிய அங்கம் முழுமைத் தற்காப்பைப் புதுப்பொலிவு, கேளிக்கை, ஈடுபாட்டு உணர்வு ஆகியவற்றைப் புலப்படுத்தும் வகையில் எடுத்துக் காட்டும்.
பெரிய அளவிலான ஆறு வண்ண மிதவைகள், வீர வணக்கம் செலுத்துவது இரண்டும் முத்தாய்ப்பாக அணிவகுப்பில் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
முழுமைத் தற்காப்பின் ஒரு தூணான சமூகத் தற்காப்பைக் குறிக்கும் குடை போன்ற வழக்கமான பொருள் மூலம் ஒவ்வொரு மிதவையும் ஒவ்வொரு தூணைப் பிரதிபலிக்கும்.
முழுமைத் தற்காப்பு அணிவகுப்பின் புத்தாக்க இயக்குநரான திரு ஹுவாங் ஜின்ஸியாங், 34, பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மக்களுக்கும் முழுமைத் தற்காப்பின் கருப்பொருளை விளக்க எளிமையான வழியைக் காண விரும்பியதாகக் கூறினார்.
"முழுமைத் தற்காப்புடன் ஒவ்வொருவரும் தொடர்புகொள்ள லாம். அதில் ஈடுபாட்டு உணர்வுடன் திகழ முடியும் என்பதைப் புலப்படுத்தக்கூடிய அணுகுமுறையை விரும்பினோம்.
"ஆகையால், மிதவைத் தற்காப்பு அங்கத்தைப் புதுப்பொலிவுடன் சமகாலத்திற்கு ஏற்ற ஒன்றாக, கேளிக்கையுடன் கூடியதாக அமைக்க முடிவு செய்தோம். இதனால் மக்கள் அதைப் பற்றிப் பேசுவதற்கு வழிபிறக்கும்," என்று நேற்று நடந்த ஊடக நிகழ்ச்சியில் அவர் விளக்கினார்.
முழுமைத் தற்காப்பு மிதவைகள் பேசும்பொருளாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முழுமைத் தற்காப்பு அணிவகுப்பில் வழக்கமாக இடம்பெறக்கூடிய சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிங்கப்பூர் காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரின் அணிவகுப்பு இந்த ஆண்டும் இடம்பெறும்.
இவற்றோடு, முழுமைத் தற்காப்பின் இதர தூண்களுக்கும் பரந்த அளவில் முக்கியத்துவம் கொடுக்க தான் விரும்பியதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
முழுமைத் தற்காப்பு அணிவகுப்பில் மொத்தம் 650 பேர் பங்கெடுப்பார்கள்.
பெரிய அளவிலான முழுமைத் தற்காப்புக் கொடியைப் பறக்கவிடுவது, கடந்த 50 ஆண்டு காலத்தில் முழுமைத் தற்காப்புக்குத் தொண்டாற்றி உள்ளோருக்கு நன்றி கூறி வீர வணக்கம் செலுத்துவது ஆகியவையும் இடம்பெறும்.
இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் 9ஆம் தேதி பாடாங் திடலில் நடக்கிறது.
அணிவகுப்பு தளபதி லெப்டினண்ட் கர்னல் ரகுமாரன் தேவேந்திரன், 38, தேசிய தின அணிவகுப்பு 2023ஐ வழி நடத்துகிறார். மாஸ்டர் வாரண்ட் அதிகாரி பாண்டிகுமாரன் ஆர்த்தியப்பன், 45. அணி வகுப்பு படைப்பிரிவு சார்ஜன்ட் மேஜராக இருப்பார்.
"2019க்குப் பிறகு கட்டுப்பாடுகள் இன்றி "நமது தேசத்தை ஒன்றிணைந்து காப்போம்" எனும் கருப்பொருளுடன் நடக்க உள்ள இவ்வாண்டு அணிவகுப்பில் அணிவகுத்துச் செல்லும் 34 படைப்பிரிவுகளில் 1700க்கும் மேற்பட்டோர் பங்கெடுப்பர்," என்று அணிவகுப்பு தலைவர் கர்னல் லிம் யு சிங் குறிப்பிட்டார்.