ஆண்டராய்ட் சாதனம் பயன்படுத்தும் இரண்டு பேர் இந்த மாதம் திருட்டுச் செயலி தொடர்பான மோசடிகளில் சிக்கி $99,800 மத்திய சேமிநிதிச் சேமிப்பை இழந்து விட்டனர்.
அந்த அப்பாவிகள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத்தளங்களில் கடலுணவு போன்ற மளிகைப்பொருள்கள் விளம்பரங் களைப் பார்த்து ஏமாந்துவிட்டதாக காவல்துறை நேற்று தெரிவித்தது.
விளம்பரங்களைப் பார்த்ததும் அவர்கள் தங்கள் சமூக ஊடகத்தளங்கள் மூலமாக அல்லது வாட்ஸ்அப் மூலமாக விளம்பர நிறுவனங்களுடன் தொடர்புகொண்டனர்.
'மளிகைப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு பணத்தைச் செலுத்தத் தோதாக இந்தச் செயலியை ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்' என்று சொல்லி நிறுவனங்கள் அவர்களுக்கு முகவரி (URL) ஒன்றை அனுப்பின.
அந்தச் செயலியை மூன்றாம் தரப்பு அல்லது இணையத் தொடர்பில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அந்த அப்பாவிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்தகைய செயலியைப் பதி விறக்கம் செய்யும்போது திருட்டுச் செயலியும் கைப்பேசிக்குள் அல்லது கணினிக்குள் புகுந்துவிடும்.
இது அப்பாவிகளுக்குத் தெரியாது. அந்தத் திருட்டு செயலி மூலம் மோசடிப் பேர்வழிகள் எங்கேயோ இருந்துகொண்டு அப்பாவிகளின் சாதனங்களில் இருந்து அவர்களின் ரகசிய தகவல்களைத் திருடிவிடுவார்கள்.
அதோடு நின்றுவிடாமல் அப்பாவிகளுடன் தொடர்புகொண்டு ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும் என்று சொல்லி சிங்பாஸ் விவரங்களையும் சில நேரங்களில் மோசடிப்பேர்வழிகள் கேட்பதுண்டு.
அதை நம்பி செயல்படும் அப்பாவிகள், தங்கள் விவரங்களைப் பயன்படுத்தி அந்தத் திருட்டுச் செயலிக்குள்ளேயே பணத்தைச் செலுத்தும் நிலை ஏற்படும். அப்போது பயன்படுத்தப்படும் விவரங்களை அந்தச் செயலி திருடிவிடும்.
அதைக்கொண்டு மோசடிப் பேர்வழிகள் தொலைவில் இருந்தபடியே அப்பாவிகளின் மத்திய சேமநிதிக் கணக்குக்குள் சென்று 'பேநவ்' வழி பணத்தை எடுக்கக் கோருவார்கள்.
சேமநிதிப்பணம் அப்பாவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் மோசடிக்காரர்கள் பேநவ் மூலம் பணத்தை எடுத்துவிடுவார்கள்.
தங்கள் வங்கிக் கணக்கைப் பார்க்கும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது அப்பாவிகளுக்குத் தெரியவரும்.
ஆகையால் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளும்படி காவல்துறை மக்களுக்கு ஆலோசனை கூறியது.