வீட்டில் செல்லப்பிராணியாக அதிக எண்ணிக்கையில் பூனைகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஒருவர் 100க்கும் மேற்பட்ட பூனைகளை வளர்க்கிறார்.
இந்த ஆண்டில் இதுவரை தானும் இதர நான்கு பூனை மீட்பாளர்களும் சேர்ந்து மொத்தம் 438 பூனைகள் சம்பந்தப்பட்ட 13 விவகாரங்களைக் கையாண்டு இருப்பதாகத் திருவாட்டி வாத்தி என்ற மாது கூறினார்.
பூனைகள் வளர்க்கப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் தலா 20 பூனைகள் இருந்தன.
சென்ற ஆண்டு முழுமைக்கும் குறைந்தபட்சம் 369 பூனைகள் சம்பந்தப்பட்ட 23 விவகாரங்களைத் தான் கையாண்டதாக அவர் குறிப்பிட்டார்.
விலங்குகளுக்கு நோய் பிரச்சினைகள் ஏற்படுவதையும் அவை பல்கிப் பெருகுவதையும் தடுக்க இத்தகைய மீட்பாளர்கள் பூனைகள் மலடாக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
விலங்கு நல்வாழ்வு பற்றியும் பொறுப்புகள் குறித்தும் அவர்கள் உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூறுவார்கள். வீட்டைத் தூய்மைப்படுத்துவது, சில விவகாரங்களில் பூனைகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது போன்றவற்றையும் அவர்கள் செய்வர்.

