ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும் மனித உயிரணுக்கள் சம்பந்தப்பட்ட புதிய பரிசோதனை முறை மூலம், விரைவில் விஞ்ஞானிகளால் குடிநீரில் ரசாயன பொருள்களைக் கண்டறிய முடியும்.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் பரிசோதனை ஆற்றலில் இந்தப் புதிய முறை சேர்க்கப்படலாம்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் அபாயகரமான பொருள்களைக் கண்டறியக்கூடிய ஆரம்பகட்ட எச்சரிக்கை முறையாக இது செயல்படலாம்.
பொதுவாக, தண்ணீரில் பலதரப்பட்ட மாசு பொருள்களும் ரசாயன பொருள்களும் இருக்கும். அவை ஒவ்வொன்றாக பரிசோதிக்க நேரமும் வளங்களும் தேவைப்படும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) நன்யாங் சுற்றுப்புற, தண்ணீர் ஆய்வுக் கழக இயக்குநரான பேராசிரியர் ஷேன் ஸ்னைடர் தெரிவித்தார்.
நுரையீரல், கல்லீரல் உயிர் அணுக்கள் போன்ற மனித உயிர் அணுக்களுடன் இந்த வெவ்வேறு பொருள்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்வதன் மூலம், மனிதர்களுக்கு கெடுதியானவற்றை விஞ்ஞானிகள் அடையாளம் காண முடியும்.
தண்ணீரில் குறிப்பிட்ட சிலவகை ரசாயன பொருள்களைக் கூடுதல் பரிசோதனைக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் உட்படுத்த இந்தப் பரிசோதனை முறை உதவக்கூடும் என்று கழகம் குறிப்பிட்டது.
தான் ஏற்கெனவே ஆண்டுதோறும் ஏறத்தாழ 500,000 தண்ணீர் தர பரிசோதனைகளைச் செய்து வந்துள்ளதாக கழகம் சொன்னது.
$92 மில்லியன் மதிக்கத்தக்க நிதியாதரவுத் திட்டத்தால் பலன்பெறும் தண்ணீர் ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்று.
கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்க கழகம் இலக்கு கொண்டுள்ளது. தற்போது அதன் பயன்பாடு, ஒரு கன மீட்டருக்கு 3.5 கிலோவாட் மணியாக உள்ளது. 2025க்குள் இதை ஒரு கன மீட்டருக்கு 2 கிலோவாட் மணிக்குக்கீழ் குறைப்பது அதன் இலக்கு.

