போன விஸ்தாவில் உள்ள 'புளோசம்ஸ் பை தி பார்க்' கூட்டுரிமை வீட்டை வாங்கி பின்னர் அதிலிருந்து பின்வாங்கியதற்காக சிங்கப்பூரர் ஒருவர் கிட்டத்தட்ட $30,000ஐ இழந்தார்.
மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அந்த வீட்டின் விலை மதிப்பு $2.3 மில்லியன். அதற்காக அந்த ஆடவர் 5 விழுக்காடு முன்பணம், அதாவது $115,000ஐ செலுத்தியிருந்தார். ஆனால் விற்பனை, வாங்குதல் உடன்பாட்டில் கையெழுத்திட்ட இரு வாரங்களில் அதில் இருந்து அவர் பின்வாங்கினார்.
வீடு வாங்கியதை ரத்து செய்ததற்காக, அதன் விற்பனை விலையில் 1.25 விழுக்காட்டை, அதாவது $28,750ஐ அவர் இழக்க நேரிட்டது.
வீட்டுக் கடனுக்கான அதிக வட்டி விகிதம் குறித்து தாம் கவலையுற்றதாக அந்த ஆடவர் குறிப்பிட்டார். வீடு வாங்கி மூன்று ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு 15% முதல் 20% வரை உயர்ந்தால் அதை விற்க அவர் விரும்பினார்.
ஆனால், அதை வாங்கிய இரு வாரங்களில் அவருக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.
ஆரம்பத்தில் அதை முதலீட்டு வாய்ப்பாக கருதிய அவருக்கு அது நிதிச்சுமையாக மாறிவிட்டது.

