சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாளை ஜூன் மாதம் 29ஆம் தேதி கொண்டாட உள்ளதாக முஃப்தி நஸிருதீன் முகம்மது நசிர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறைந்தபோது பிறை நிலா தென்படாததால், துல்ஜஹ் மாதத்தின் தொடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறுவதைக் குறிப்பதாக முஃப்தி கூறினார்.
துல்ஹஜ் மாதத்தின் 10வது நாளில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. சவூதி அரேபியாவின் மக்காஹ் நகருக்கு புனித ஹஜ் யாத்திரையின் முடிவை அது குறிக்கிறது.
"தொடர்ந்து நல்ல செயல்களை மேற்கொள்வதோடு ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளோரின் நலனுக்காக துஆ செய்து இம்மாதத்தை வரவேற்போம்," என்று முஃப்தி குறிப்பிட்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 900 முஸ்லிம்கள் இவ்வாண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
2022ல் சிங்கப்பூரிலிருந்து ஹஜ் யாத்திரை செல்ல சிங்கப்பூருக்கு தொடக்கத்தில் 407 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை பின்னர் 900ஆக உயர்த்தப்பட்டது. கொவிட்-19க்கு முந்தைய எண்ணிக்கையுடன் இது இணையானது.

