புதிதாகத் திறக்கப்பட்டுள்ள புக்கிட் கேன்பெரா உணவங்காடி நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிலையத்தின் வடிவமைப்பு குறித்து உணவுக் கடைக்காரர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உணவுக்கடை தொகுதி நடத்துநராக ‘கனோப்பி ஹாக்கர்ஸ்’ குழுமம் கூடுதல் தணிப்பு நடவடிக்கைகள் தேவையா என்பது குறித்து சோதித்துப் பார்க்கவுள்ளது.
அங்குள்ள கோழிச்சோறுக் கடை தீப்பிடித்துக் கொண்டதைத் தொடர்ந்து, தமது கடையின் முகப்பின்மீது ஏறி இறங்க வேண்டியிருந்ததாக கடைக்காரர் ஒருவர் குறிப்பிட்டார்.
தங்களது கடைகளுக்கு வெளியே உள்ள சுவரில், கைக்கு எட்டாத தூரத்தில் தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளதாக வேறு சில கடைக்காரர்கள் கூறினர்.
தகுதிபெற்ற நபருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவிலேயே கடைகளின் வடிவமைப்பு செய்யப்பட்டதாக ‘கனோப்பி ஹாக்கர்ஸ்’ குழுமம் விளக்கமளித்தது. அது தீயணைப்புக் குறியீட்டுடன் ஒத்திருப்பதாக அது சொன்னது.
தகுதிபெற்ற நபர் என்பவர் பதிவுசெய்யப்பட்ட கட்டடக்கலை நிபுணர் அல்லது தொழில்முறை ரீதியான பொறியாளர் ஆவார்.
ஒரு மாடி மட்டும் உள்ள இந்த உணவங்காடி நிலையத்தில் 44 கடைகள் உள்ளன. அவை எட்டு, ஒன்பது கடைகள் கொண்ட குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கடையின் பின்புறத்திலும், மற்ற கடைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான இடம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு குழுவிலும் உட்புறத்திலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக ஒரேயொரு பொதுவான கதவு உள்ளது.
கடைக்காரர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில், கடையின் முன்பக்கம் வழியாக நுழையவோ வெளியேறவோ அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
கடைக்குள் தீயணைப்பான்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்க வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு உணவுக்கடை தொகுதிகளையும் காப்பிக்கடைகளையும் நடத்திய அனுபவம் உடைய ‘கனோப்பி ஹாக்கர்ஸ்’ குழுமம் தொடங்கியுள்ள முதல் உணவங்காடி நிலையம் புக்கிட் கேன்பெரா. 2022 செப்டம்பர் 13ஆம் [Ϟ]தேதி தீப் பாதுகாப்புக்காக பரிசோதிக்கப்பட்டதாக அக்குழுமம் தெரிவித்தது.