கம்ஃபர்ட்டெல்குரோவின் ‘சிடிஜி ஸிக்’ செயலி வழியாக டாக்சி, தனியார் வாடகை கார் சேவைக்கு ஜூலை 1 முதல் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு பயணிகள் கூடுதலாக 70 காசு செலுத்த வேண்டியிருக்கும்.
இப்புதிய தளக் கட்டணம் தன் செயலியில் செய்யப்படும் லிமோசின் மாற்று சேவைக்கும் பொருந்தும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ திங்கட்கிழமை தெரிவித்தது. ஆனால், தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் செய்யப்படும் முன்பதிவுகளுக்கோ சாலையில் கைகாட்டி டாக்சியில் ஏறுவதற்கோ இக்கட்டணம் பொருந்தாது.
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வழங்கப்படும் போக்குவரத்து சேவைத் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்தவே, செயலி மூலம் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு தளக் கட்டணத்தை தான் அறிமுகம் செய்வதாக கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்தது.
கிராப், கோஜெக், தடா, ரைட் ஆகிய தனியார் வாடகை கார் நிறுவனங்கள் வெவ்வேறு அளவில் தளக் கட்டணம் விதிக்கின்றன. அத்தகைய கட்டணங்கள் அந்தந்த நிறுவனங்களுக்கே செல்கின்றன. செயலியைப் பராமரித்து, மேம்படுத்தவே இந்தக் கட்டணம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, கோஜெக் செயலியில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு தற்போதுள்ள 70 காசு தளக் கட்டணத்துக்குப் பதிலாக பயண நேரம், பயண தூரம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் அடுக்குக் கட்டணம் விதிக்கவுள்ளதாக கோஜெக் நிறுவனம் திங்கட்கிழமை அறிவித்தது.
ஜூலை 3ஆம் தேதி இது நடப்புக்கு வரும். இந்த மாற்றத்தின் காரணமாக பயணக் கட்டணங்கள் 10 காசு வரை குறைவாகவோ 30 காசு வரை கூடுதலாகவோ இருக்கலாம்.