நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கு ஊக்குவிப்பு

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கு ஊக்குவிப்பு

2 mins read
fc956bb3-fb29-49b2-a36b-be82545fa002
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிருமிப் பரவலுக்குப் பிந்திய உலகிலும் இன்றைய வேலைச் சூழலிலும் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் மிக முக்கியமானதாக இருந்துவருகின்றன.

அத்தகைய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் ஆராய்ந்துவருகின்றன. சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கன்று.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைப் பயன்மிக்கதாகவும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வழியிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து சிங்கப்பூரில் உள்ள சிறிய நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள் திங்கட்கிழமையன்று வாழ்நாள் கற்றல் கழகத்தில் கலந்துபேசினர்.

அத்தகைய ஏற்பாடுகள் முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருந்தாலும், சிறிய ஊழியரணி, குறைவான வளங்கள், கட்டமைப்புகள் போன்ற சவால்களைச் சிறிய நிறுவனங்கள் எதிர்நோக்குகின்றன.

ஊழியர்களைப் பொறுத்தவரை, நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த வேலை மனநிறைவு மேம்படுவதோடு, ஊழியர்களை வேலையில் தக்கவைத்துக்கொள்ளும் விகிதம் அதிகரிப்பதை உறுதிசெய்ய முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அதிக ஈடுபாட்டைக் காட்டும் ஊழியரணியையும் அமைக்க முடிகிறது.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு, வெவ்வேறு பின்னணிகளிலிருந்தும் பிரிவுகளிலிருந்தும் வரும் ஊழியர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முதலாளிகள் பூர்த்திசெய்ய வகைசெய்கிறது.

குடும்பங்களுக்கான சிங்கப்பூரை உருவாக்குவதற்குரிய ஆதரவை வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் குடும்பத்துக்கு உகந்த வேலையிட வழக்கங்களை ஊக்குவிக்கவும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் முயற்சிக்கான தேவையை கலந்துரையாடல் எடுத்துரைத்தது.

பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, நிதிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜாவும், கல்வி, மனிதவளத்துக்கான துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங்கும் பேச்சாளர்களில் அடங்குவர்.

மூப்படையும் மக்கள்தொகை, குறைவான கருத்தரிப்பு விகிதம், இறுக்கமான வேலைச் சந்தை போன்ற ஊழியரணியைப் பாதிக்கக்கூடிய விவகாரங்கள் பற்றி குமாரி இந்திராணி பேசினார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான சிங்கப்பூரின் முத்தரப்பு வழிகாட்டிகள் 2024இல் வெளியிடப்படும் என்று திருவாட்டி கான் கூறினார். அத்தகைய ஏற்பாடுகள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உயர்மட்ட நிர்வாகத்தின் ஆதரவு முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்