சிங்கப்பூர், ஹாங்காங் இரண்டும் ஆசியாவின் மிக முக்கிய நிதி மையங்களாகத் திகழ்கின்றன.
சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஹாங்காங்கின் கெத்தே பசிபிக் இரண்டின் எதிர்காலமும் கொவிட்-19 காலகட்டத்தின்போதும் அதற்குப் பிறகும் வேறு வேறு பாதையில் பறக்கத் தொடங்கின.
அவற்றின் சந்தை மதிப்பில் இப்போது பெரும் வேறுபாடு காணப்படுகிறது. எஸ்ஐஏ மதிப்பு இப்போது US$17 பில்லியன். கெத்தே பசிபிக்கின் மதிப்பைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
இந்த வேறுபாடு, நான்கு ஆண்டுகளுக்கு முன் சுமார் US$2 பில்லியனாகத்தான் இருந்தது.
இரண்டுமே கொவிட்-19 காலத்தில் இருந்ததைவிட இப்போது சிறப்பாக செயல்படுகின்றன. இருந்தாலும் எஸ்ஐஏ மிகவும் வேகமாக மீட்சி கண்டு பயணத் தேவைகளை நன்கு பயன் படுத்திக்கொண்டு உயர உயர பறக்கிறது.
எஸ்ஐஏயின் பங்கு விலையே இதைப் பறைசாற்றுவதாக புளூம்பர்க் வியூகத்துறை பகுப்பாய்வாளர் டிம் பாக்குஸ் தெரிவித்தார்.
ஆசிய விமான நிறுவன மீட்சியின் அடையாளம் என்று எஸ்ஐஏ வர்ணிக்கப்படுகிறது.
அதேவேளையில் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளை அகற்ற ஹாங்காங் நிர்வாகம் தயங்கியதால் கெத்தே நிறுவனத்தின் மீட்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்களின் எண்ணிக்கையையும் சேவையையும் பழைய நிலைக்குக் கொண்டுவர கெத்தே நிறுவனம் படாதபாடுபடுகிறது.
கெத்தே பசிபிக்கைப் பொறுத்தவரை அதன் பயணிகள் அளவு கொவிட்-19க்கு முந்தைய அளவை அடுத்த ஆண்டு முடிவில்தான் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்ஐஏ, மார்ச்சில் முடிவடைந்த ஆண்டில் சாதனை அளவில் $2.16 பில்லியன் லாபம் ஈட்டியது. அதன் வருவாய் கொவிட்-19க்கு முந்தைய அளவைவிட அதிகமாகி $17.8 பில்லியனாக இருந்தது.
கெத்தேவும் மேம்பட்டு வருகிறது. ஆனால் 2022ல் அது ஈட்டிய HK$51 பில்லியன் (S$8.75 பில்லியன்) வருவாய், 2019ல் அதன் வருவாயில் பாதிகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ஐஏ ஊழியர்கள் எட்டு மாதச் சம்பளம் அளவுக்குப் போனஸ் பெறுகிறார்கள். ஆனால் இதைப் பொறுத்தவரை கெத்தே நிலைமை சரியில்லை.
பங்குச் சந்தையில் எஸ்ஐஏ பங்கு கடந்த மூன்று மாதங்களில் உலகின் ஆகஅதிக விலை கூடிய பங்குகளில் ஒன்றாக இருந்தது. அது 34% விலை கூடியது. கெத்தே பங்கு விலை உயர்வு 6.2% ஆக இருந்தது.
எஸ்ஐஏ கடந்த மே மாதத்தில் 2.8 மில்லியன் பயணிகளைச் சுமந்து சென்றது. கெத்தே விமானங்களில் கடந்த ஏப்ரலில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பயணிகள் தான் சென்றனர்.