கிட்டத்தட்ட $8 மில்லியன் வரி கோரிக்கை மோசடி தொடர்பில் ஆடவர் ஒருவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவரான அவர், குறைந்தபட்சம் 77 விலைப்பட்டியல்களில் தில்லுமுல்லு செய்து அவற்றை திருத்தினார்.
அந்த நிறுவனம் விற்பனைகள் மூலம் குறைந்தபட்சம் $25 மில்லியன் சம்பாதித்து இருப்பதாக அந்தப் பட்டியல்கள் காட்டின.
வோங் மெங் ஃபாய் என்ற அந்த ஆடவரும் இதர கும்பல் உறுப்பினர்களும் செய்த காரியங்களால் நாகூர் டிரேடிங் என்ற நிறுவனம் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட விலைப்பட்டியல்களில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டன.
சட்டவிரோதமான முறையில் மொத்தம் கிட்டத்தட்ட $8 மில்லியன் வரி கோரிக்கைகள் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டன.
வோங், 44, செவ்வாய்க்கிழமை $30,000க்கும் $46,000க்கும் இடைப்பட்ட தொகையைச் செலுத்தினார். அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.