சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), உலகளாவிய நிலையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உலகின் தலைசிறந்த நிறுவனம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த ஆய்வு, 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது.
கத்தார் ஏர்வேஸ் இதுவரையில் தலைசிறந்த விமான நிறுவனமாக இருந்து வந்தது. ஆனால், அதை தோற்கடித்து எஸ்ஐஏ உலகிலேயே தலைசிறந்த விமான நிறுவனம் என்ற பெயரைப் பெற்று இருக்கிறது.
லண்டனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கைடிராக்ஸ்’ என்ற ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் ஆய்வு நடத்தி விமான நிறுவனங்களைப் பட்டியலிடுகிறது.
கடந்த 2019, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் எஸ்ஐஏ நிறுவனம் மத்திய கிழக்கை சேர்ந்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தை வீழ்த்த முடியாமல் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது.
ஆய்வு, 2022 செப்டம்பருக்கும் 2023 மே மாதத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள், 320க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களை அதில் மதிப்பிட்டனர்.
ஆய்வின் அடிப்படையில் பார்க்கையில், உலகிலேயே மூன்றாவது ஆகச் சிறந்த விமான நிறுவனமாக ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் திகழ்கிறது.
எமிரேட்ஸ் நிறுவனம், ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தைப் பிடித்து இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
எஸ்ஐஏ நிறுவனம் இத்துடன் ஐந்தாவது முறையாக இந்த உலகச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
சிங்கப்பூரின் நிறுவனம், 2023 ஸ்கைடிராக்ஸ் உலக விமான நிலைய விருது வழங்கும் விழாவில், தலைசிறந்த முதல் வகுப்பு விமான நிறுவனம், தலைசிறந்த முதல் வகுப்பு வசதி நிறைந்த நிறுவனம், ஆசியாவிலேயே தலைசிறந்த நிறுவனம் ஆகிய விருதுகளையும் வென்றது.
விருது வழங்கும் நிகழ்ச்சி பாரிஸ் விமானக் காட்சியையொட்டி செவ்வாய்க்கிழமை நடந்தது.
எஸ்ஐஏவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட், நீண்ட தூரம் பறந்து செல்லக்கூடிய குறைந்த கட்டண விமான நிறுவனப் பிரிவில் தலைசிறந்த விமான நிறுவனமாகத் தேர்வு பெற்றது.
உலகின் தலைசிறந்த மலிவுக் கட்டண பிரிவில் ஸ்கூட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
எஸ்ஐஏ கடந்த மே மாதத்தில் 2.8 மில்லியன் பயணிகளைச் சுமந்து சென்றது. கெத்தே விமானங்களில் கடந்த ஏப்ரலில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பயணிகள் தான் சென்றனர்.